முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண்மைப் பல்கலை., விழா: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக 20 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பொன்விழா ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியினை வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச்செயலாளர் முனைவர்.சந்தீப் சக்சேனா தலைமையில், மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன் முன்னிலையில், வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணை வேந்தர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு ஆகியோர் குத்துவிளக்கேற்றி நேற்று துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பொன்விழா ஆண்டு சின்னம் மற்றும் வேளாண் தொழில் முனைவோர்க்கான விதை உற்பத்தி பயிற்சி கையேட்டினை வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணை வேந்தர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு பெற்றுக்கொண்டார். விவசாயிகளுக்கு அமைச்சர்கள் அம்மா விதைகளை வழங்கினர். அதனைத்தொடர்ந்து பொன்விழா ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை, பொன்விழா ஆண்டு தேசிய மற்றும் உலகளாவிய கருத்தரங்கு தகவல் கையேடுகள் மற்றும் மதுரை வேளாண்மைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க தகவல் கையேடுகள் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணை வேந்தர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசும் போது கூறியதாவது,

மதிப்புமிக்க, மகத்துவமிக்க, மாட்சியமைமிக்க மதுரை மாநகரிலே, இந்தியாவிலேயே முதன்மை பல்கலைக்கழகமாக திகழும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1965ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் நாள் துவக்கப்பட்டு இன்றைய தினம் ஐம்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த ஆற்றல்மிக்க கல்லூரியின் பொன்விழா ஆண்டில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். "வருகின்ற வறட்சியையும் வரப்பு கட்டி வரையறை செய்ய முடியாது" அப்படிப்பட்ட இயற்கையின் இசைவினில் இயைந்து வாழக்கூடிய சமுதாயத்திற்காக பாடுபடுகின்ற துறைதான் வேளாண்மைத்துறை. தேசிய மக்கள் தொகையில் 7 சதவீதத்தினரையும், சுமார் 49 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பை சாகுபடி செய்யும் விவசாயிகளையும், குறிப்பாக இதில் 91 சதவிகிதத்தினராக உள்ள சிறு, குறு விவசாயிகளையும் காக்க வேண்டிய முழுப்பொறுப்பும் நம் அனைவரின் கையில் தான் உள்ளது. அதைவிட பெரும் பொறுப்பு, கிடைக்கின்ற நீரை வைத்து வேளாண்மையை பெருக்க வேண்டும் என்கின்ற பெரிய சவால் நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, 2025ம் ஆண்டு கிடைக்கக்கூடிய நீரின் அளவு 4.74 மில்லியன் எக்டர் மீட்டர் (மி.எ.மீ) ஆகும். ஆனால் நீரின் தேவை 6.20 (மி.எ.மீ) ஆக இருக்குமென்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் 1.46 (மி.எ.மீ) அளவு நீர் அதாவது, 31 சதவிகித அளவிற்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகின்றது. எனவே, தான் தமிழக முதலமைச்சர் முல்லை பெரியார் நீர்மட்ட அளவினை உயர்த்தி, வெற்றிக்கனிகளிலிருந்து விதைகள் பறித்து விவசாயிகளுக்கு நிரந்தர வித்தாக விதைத்து உள்ளார். மாணவச்செல்வங்களாகிய நீங்கள், உங்களுடைய மனமும், கண்ணும் ஒருங்கிணைந்து செயல்படும் விதமாக இருக்க வேண்டுமே தவிர, பட்டங்களுக்காகவும், பதவிகளுக்காகவும் இருக்கக்கூடாது.

மாணவர்கள் நூல்களை வாசிப்பது, பாடப்புத்தகங்களை தாண்டி சிந்திப்பது, படைப்பாக்கத்திறன்களுடன் விளங்குவது என உங்களது அறிவுத்திறனை நல்ல முறையிலேயே வளர்த்துக்கொள்ளவும், வாய்ப்பினை நல்ல முறையில் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழக முதல்வர் கல்வி நிலையங்களை சீர்படுத்தினால் தான், மாணவர்கள் சீராக்கம் பெற்று, சமுதாயம் சீர்திருத்தப்படும் என்ற உயரிய நோக்கோடு ரூ.2 கோடி மதிப்பில் தங்கும் விடுதிகள், ரூ.3 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வணிக வளாகம், வேளாண் ஆராய்ச்சியின் மூலம் ரூ.28 கோடி செலவில் 6 இனங்களில் மகத்துவ மையம், ரூ.15 கோடியில் உயிர் மரபியல் ஆய்வுக்கூடம், ரூ.8.56 கோடி செலவில் புதுமையான ஆராய்ச்சி சிறப்பு மையம் என பல்வேறு வாய்ப்புகளையும், வசதிகளையும் வழங்கியுள்ளார். மாணவர்களாகிய உங்கள் உள்ளத்தில் தெளிவு உண்டாகட்டும், ஒவ்வொரு செயலிலும் ஊக்கம் மிளிரட்டும், வளர்ந்த இந்தியாவைச் செதுக்கும் வளமான சக்தி நமதாகட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.கு.இராமசாமி, மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர்.ஆர்.தாண்டவன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.மா.திருமலை, திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.முத்துராமலிங்கம், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சாமி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.கருப்பையா, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன், மதுரை மாநகராட்சி துணை மேயர் கு.திரவியம், மாவட்ட ஊராட்சித்தலைவர் மு.தர்மராஜா, துணைத்தலைவர் பி.ஜபார், மதுரை கிழக்கு ஒன்றியப் பெருந்தலைவர் பா.பாண்டீஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர்.இரா.இரபிந்திரன் வரவேற்புரையாற்றினார். முடிவில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) முனைவர்.சி.சின்னுசாமி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago