முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கட்சி அந்தஸ்து விவகாரம்: கட்சிகள் கோரிக்கை

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக 21 - இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேசிய கட்சி அந்தஸ்து விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டாம் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் மோசமான தோல்வியை சந்தித்தன. தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மாநில கட்சிகளை விட மிக குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. தேசிய கட்சி அந்தஸ்து பெற வேண்டும் என்றால் மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் 3 மாநிலங்களில் போட்டியிட்டு குறைந்தது 11 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மொத்த வாக்கு எண்ணிக்கையில் 6 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதுடன் 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில் எந்த தகுதியையும் இந்திய கம்யூனிஸ்ட், என்சிபி, பகுஜன் சமாஜ் ஆகிய தேசிய கட்சிகள் கடந்த தேர்தலில் பெறவில்லை. வாக்கு சதவீதத்தை பொறுத்தமட்டில் பகுஜன் சமாஜ் 4.1 சதவீதமும், தேசியவாத காங்கிரஸ் 1.6 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் 0.8 சதவீதமும் பெற்றன. இதை தொடர்ந்து அவற்றின் தேசிய கட்சி அந்தஸ்தை பறிமுதல் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள மகராஷ்டிரா, ஜார்கண்ட், அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேசிய கட்சி அந்தஸ்தை வாபஸ் பெற கூடாது என தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளன. இதே போன்ற கோரிக்கை கடந்த வாரம் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்