முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் நாளை மதுரை வருகை: வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக 21 - பாராட்டு விழாவிற்காக நாளை மதுரை வரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து விவசாயிகள் மற்றும் அதிமுகவினர் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாளை மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு அருகே பாராட்டு விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானம் முழுவதும் செம்மண் கொட்டப்பட்டு பள்ளம் மேடுகள் சீர்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது ஜெயலலிதா பேசினார். அதற்காக அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடு தளம் தற்போது தூர்ந்து விட்டது. இதனால் ஜேசிபி இயந்திரம் மூலம் சீர் செய்து ஹெலிபேடு தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிபேடு தளத்தில் இருந்து விழா மேடைக்கு முதல்வர் வரும் வழி நெடுகிலும் புதிய தார் ரோடு போடப்பட்டுள்ளது. வண்ணமிகு தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பந்தல் அமைக்கும் இடம் ஹெலிபேடு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் மாலை நேரத்தில் கருமேக மூட்டம் காணப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா மாலை 4 மணிக்கு விழாவில் கலந்து கொள்வதால் மழை ஏதேனும் பெய்து விழா பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தொண்டர்கள் அமரும் வகையில் சுமார் 2 ஆயிரம் அடி நீளத்திற்கு தகர பந்தல் மின் விசிறியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேடை 70 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் முல்லைப் பெரியாறு அணையின் படம் பின்புலத்தில் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. விழா மைதானத்தின் அருகே உள்ள ரிங் ரோட்டில் தோரண வாயில் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் ரிங் ரோட்டின் ஓரத்தில் சுமார் 60 அடி உயரத்தில் அணையின் மாதிரி கட்அவுட் செட் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இரு பகுதியிலும் அலங்கார தட்டிகள் கட்டப்பட்டுள்ளது. ரிங் ரோடு, சிவகங்கை ரோடு, மாட்டுத்தாவணி, பாண்டிகோவில், கோரிப்பாளையம், அழகர்கோவில் ரோடு, செல்லூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளின் இருபுறமும் வரவேற்பு பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ தினமும் சென்று பார்வையிட்டு வருகிறார். மேலும் விழா நடைபெறும் மேடை அருகே மின்சார வசதிக்காக டிரான்ஸ்பார்மரும் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை நகரில் பிரம்மாண்டமான முறையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்