முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்: முதல்வர்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.21 - தடைகளை தகர்தெறியக்கூடிய மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும்; தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்றும்; முதல்வர்ஜெயலலிதா அதிமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். .

எழுந்து நடந்தால் இமயமும் நமக்கு வழிகொடுக்கும் என்றும், உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறைபிடிக்கும் என்று அவர் கூறினார்.அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர், வாரியத்தலைவர், தொழிற்சங்க பிரமுகர் உள்ளிட்ட அதிமுகவின் நிர்வா கிகள் 9 பேர் இல்ல திருமணங்களை முதல்வர் ஜெயலலிதாநேற்று நடத்தி வைத்தார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மணவிழா பந்தலில் இந்த திருமணங்கள் நடைபெற்றன. முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு ஜோடி மணமக்களை மேடைக்கு வரவழைத்து, மணமகள் கையில் மங்கள நாணை எடுத்துக்கொடுத்தார். மங்கள நாண் அணிவிக்கப்பட்டதும் மலர்மாலைகளை கொடுத்து அவர்கள் மாலை மாற்றியதும்

அட்சதை தூவி வாழ்த்தினார். பின்னர் ஒவ்வொரு ஜோடி மணமக்களுக்கும் பரிசு பொருட்களை வாழ்த்து தெரிவித்தார்.

திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

இன்று இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்துள்ள மணமக்கள், கரும்பைப் போல இனிப்பாய், காற்றைப் போல சுகமாய், இயற்கையைப் போல ரம்யமாய், ஊர் போற்றும் அளவுக்கு, வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வாழ்க்கையில் முன்னேறும் போது பல தடைகள் வரலாம். தடைகள் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். தடைகளைக் கண்டதும் மலைத்துப் போய் மனம் தளர்ந்து விடுபவர்களால் வெற்றியை அடைய முடியாது. தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய மனப்பாங்கினை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்பமும், துன்பமும் வாழ்க்கையின் இரு பக்கங்கள். வாழ்க்கை என்றால் அதில் தொல்லை இருக்கும்; கவலை இருக்கும்; இவற்றிக்கு இடையே இன்பமும் இருக்கும். அப்படி இருந்தால் தான், அந்த வாழ்க்கை முழுமையானதாக, சுவையானதாக, பயனுள்ளதாக இருக்கும். தோல்வி காணாத மனிதன் முழு மனிதன் அல்ல என்றார் அறிஞர் அறிஸ்டோட்டில். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள். கடவுள் மீதும், உங்கள் திறமையின் மீதும் முழு நம்பிக்கை வைத்தால் துன்பங்களை முறியடித்து வெற்றியை எட்டுவது நிச்சயம். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளும் பக்குவம் ஏற்பட்டால், தடைகளைத் தாண்டி, இலக்கை நோக்கி பயணம் செய்ய அது வழி வகுக்கும். நிச்சயம் நன்மையைப் பெறலாம்.

, சில நேரங்களில் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்கள், பிரச்சனைகள் நமக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிய சுமையாக தெரியும். அதனை அப்படி நினைக்காமல், எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அடுத்த பணியை தொடர்ந்து செய்ய ஏதுவாக இருக்கும்.

எழுந்து நடந்தால் இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும் என்பதை உணர்ந்து; அதற்கேற்றப்படி தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

உன்னையறிந்தால், நீ உன்னை யறிந்தால்

உலகத்தில் போராடலாம்;

உயர்ந்தாலும், தாழ்ந்தாலும்,

தலை வணங்காமல் நீ வாழலாம்

என்ற புரட்சித் தலைவர் ஆழுசு-ன் பாடல் வரிகளுக்கேற்ப, நீங்கள் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லறமல்லது நல்லறமன்று என்னும் இன்மொழி வழி இணைந்துவிட்ட மணமக்களாகிய நீங்கள் வானும்-நிலவும் போல, தமிழும்-சுவையும் போல, இசையும்-நாதமும் போல, நகமும்-சதையும் போல பழிப்புக்கு இடமில்லாமல்; பெற்றோர், சுற்றத்தார் நல்லறம் காத்து, நீடூழி வாழ வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த திருமண விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்