முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படை கல்வீச்சு: மீனவர்கள் படுகாயம்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

மணமேல்குடி, ஆக 22 - நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஜெகதாபட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்கியதில் 4 மீனவர்கள் படுகாயமடைந்தனர். ஒருவருக்கு மண்டை உடைந்தது. படகு கண்ணாடி நொறுங்கியது. இலங்கையின் தொடர் அட்டூழியத்தால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 166 விசை படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் அவரது மகன்கள் அசோக், பாரதி மற்றும் சிலம்பரசன், ரகு ஆகிய 4 பேர் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் நடுக்கடலில் நெடுந்தீவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர்களை திரும்பி போகுமாறு எச்சரித்ததோடு சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதில் படகின் கண்ணாடிகள் நொறுங்கின. அசோக் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வலது கண்ணில் கல்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் இவர்கள் படகில் கரைக்கு திரும்பினர். சம்பவம் குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் சங்க தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து காயமடைந்த அசோக் உட்பட 4 பேரையும் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக அவர்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மீனவர் அசோக் கூறுகையில், எங்களிடம் இலங்கை கடற்படையினர் மீன் கேட்டனர். இப்போதுதான் தொழிலுக்கு வந்தோம் என கூறி வலைகளை எடுத்து காட்டினோம். ஆனாலும் அவர்கள் திடீரென சரமாரியாக கல்வீசினர். மற்ற 3 பேர் ஒளிந்து கொண்டனர். என் கண்ணில் பலமாக கல் பட்டதில் மயங்கி விட்டேன். அதனால் இலங்கை கடற்படையினர் திரும்பி சென்று விட்டனர். காயமடைந்த சக மீனவர்கள் என்னை கரைக்கு கொண்டு வந்தனர் என்றார். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கிய சம்பவம் ஜெகதாபட்டினம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்