முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் - நாகாலாந்து முதல்வர்களுடன் அமைச்சர் சந்திப்பு

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஆக 22 - அசாம், நாகாலாந்து மாநில எல்லையில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர். பதட்டத்தை தணிக்க மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ இரு மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை செயலாளர்களை நேற்று சந்தித்து பேசினார்.

நாகாலாந்து மாநிலம் கடந்த 1962ம் ஆண்டு உருவானது. அது முதல் பக்கத்து மாநிலமான அசாமுடன் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அடிக்கடி மோதல் ஏற்படுவதால் நிலைமையை கட்டுப்படுத்த மத்திய அரசின் துணை ராணுவம் எல்லை பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வப்போது மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 பேர் நாகாலாந்தில் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து எல்லை பகுதியில் கலவரம் வெடித்துள்ளது. ரோன்ஜான் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது மத்திய போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பெண்கள் உட்பட 18 பேர் காயமடைந்தனர். கோல்காட் நகரில் வன்முறை வெடித்தது. வன்முறை கும்பலை கலைக்க 2 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து எல்லை பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு மத்திய படைகள் காரணம் என மாநில முதல்வர் தருண் கோகய் குற்றம் சாட்டினார். இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. அசாம் மற்றும் நாகாலாந்து மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொலைபேசியில் பேசினார்.

பதட்டத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து இரு மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை செயலர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ திட்டமிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்