முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 700 பார்கள் மூடல்: உம்மன் சாண்டி

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஆக 23 - கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் செயல்பட்டு வரும் சுகாதாரமற்ற மதுக்கடை பார்களை மூட கேரள உயர்நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதையடுத்து 418 பார்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் மூடப்பட்ட பார்களில் தரமாக நடத்தப்பட்ட பார்களும் உள்ளன என்றும் இதை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறி சில பார் உரிமையாளர்கள் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த பார்களை பரிசோதிக்க உத்தரவிட்டது.

இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் பார்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் மூடப்பட்டுள்ள பார்களை திறக்க கூடாது என்று முஸ்லீம் லீக் , சில கிறிஸ்தவ அமைப்புகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக காங்கிரஸ் கூட்டணியிலும் மோதல் வெடித்துள்ளது. பார்களை திறக்க கூடாது என்று காங்கிரஸ் மாநில தலைவர் சுதீரன் கூறினார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் அவசர ஆலோசனை கூட்டம் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நடந்தது. இதில் பார் பிரச்சினை பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில்,

கேரளாவில் அடுத்த 10 ஆண்டுகளில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும். அதற்கு முதல் கட்டமாக பூட்டி கிடக்கும் 418 பார்களும் திறக்கப்பட மாட்டாது. இது தவிர தற்போது தற்காலிக லைசன்ஸ் உள்ள 312 பார்கள் மூடப்படும். இனிமேல் 5 நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே பார்கள் இயங்கும். ஞாயிற்று கிழமைகளில் அரசு மதுபான விற்பனை கடைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் வருடந்தோறும் 10 சதவீத அரசு மதுபான கடைகள் மூடப்படும். அதிக போதை கொண்ட மதுபான விற்பனை குறைக்கப்படும். கள் விற்பனையை அதிகரிக்க திட்டம் தீட்டப்படும். பார்கள் மற்றும் மதுக்கடைகளை மூடுவதால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்