முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு: கருணாநிதி மீது முதல்வர் தாக்கு

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக. 23 - முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதில் கருணாநிதிக்கு அக்கறை இருந்ததே இல்லை என்றும் அவருக்கு ஸ்பெக்டரத்தில்தான் கவனம் இருந்தது என்றும் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக தாக்கினார்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தி சாதனை படைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சார்பில் நேற்று மதுரையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:--

 

நீர்மட்டம் முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தப்பட்டு; தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளதற்காக, விவசாயப் பெருங்குடி மக்களாகிய உங்கள் சார்பில் எனக்கு நன்றி தெரிவிக்கும் விழா இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. என்னைப் பொறுத்த வரையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நீதியை கொண்டாடும் விழா, தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டதற்கான வெற்றி விழா என்றே இதனைச் சொல்ல வேண்டும். இந்த வெற்றி விழாவிலே பங்கேற்கும் வாய்ப்பினை எனக்கு நல்கிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி வேளாண் பெருங்குடி மக்களாகிய உங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுக்க வேண்டுமென்றால், அதற்குரிய உறுதியும், விடாமுயற்சியும் தேவை.

ஒரு குருவும், அவரது சீடர்களும் கடலோரம் அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சியினை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

ஒரு சீடனைப் பார்த்து, """"உனக்கு என்ன தெரிகிறது?"" என்று கேட்டார் குரு.

அதற்கு அந்தச் சீடன், """"திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளின் விடாமுயற்சி தெரிகிறது"" என்றான்.

இதே கேள்வியை மற்றொரு சீடனிடம் கேட்டார் குரு.

அதற்கு அந்தச் சீடன், """"துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் துன்பங்கள் சிதறிப் போகும்"" என்றான்.

இவற்றை கேட்ட குரு """"சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு"" என்று சொன்னார்.

இந்த கதையில் வருவது போல், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில்,

எனது தலைமையிலான அரசு அலைகளாயும், கரையாயும் இருந்து செயல்பட்டதால் தான் இன்று நாம் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. அணையின் முழு நீர்த்தேக்க மட்டமான 152 அடியிலிருந்து தற்காலிகமாக 136 அடிக்கு குறைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை, நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. முல்லைப் பெரியாறு அணை குறித்து சென்னை மற்றும் கேரளா உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் 2002 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த நான், ஒவ்வொரு விசாரணைக்கு முன்பும், பொதுப் பணித் துறை அதிகாரிகளையும், பொறியியல் வல்லுநர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்துப் பேசி, தமிழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய வாதங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தேன். தமிழக அரசின் சார்பில் அப்போது உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்ட வலுவான வாதங்களின் அடிப்படையில், 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடிக்கு நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும்; அணையினை பலப்படுத்தும் மீதமுள்ள பணிகளை மேற்கொள்ளலாம் எனவும், இப்பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசிற்கு கேரளா அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. மேலும், மீதமுள்ள பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்ட உடன், தனிப்பட்ட நிபுணர்கள் ஆய்வு நடத்தி அணையின் முழு நீர்தேக்க மட்டமான 152 அடிக்கு உயர்த்துவது குறித்து முடிவு செய்வார்கள் என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை அவமதிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி என நிர்ணயம் செய்து ஒரு சட்டத் திருத்தத்தை கேரளா அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத் திருத்தம் செல்லத்தக்கதல்ல என உத்தரவிட வேண்டும் என்று கோரி 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் மற்றும் தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட வாதம் என்ன என்பதை நீங்கள் இப்போது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த ஆட்சியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால், அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று மக்களிடம் தி.மு.க. கூட்டணியினர் பிரச்சாரம் செய்தனர்.

இது போன்ற பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டதன் விளைவாக,

2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மைனாரிட்டி ஆட்சி அமைந்தது. ஆனால், அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்சனையில் எந்தத் தீர்வும் காணப்படவில்லை. முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சனையில் திரு. கருணாநிதிக்கு அக்கறை இருந்திருக்குமானால், மத்திய அரசில் அப்போது தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அப்போதே அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி இருக்கலாம். ஆனால், இதை திரு. கருணாநிதி செய்தாரா? இல்லையே! அதற்கான அக்கறை திரு. கருணாநிதிக்கு இல்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வார்கள். அதுவும் சிதறாத மனமாக இருக்க வேண்டும். அப்போது தான் அது ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து, அதிலிருந்து பலம் பிறக்கும். அந்தப் பலத்தின் மூலம் தான் நாம் எதையும் சாதிக்க முடியும். ஆனால், கருணாநிதியின் மனமோ சிதறிய மனம்.

ஒரு மன்னர் யானை மீது நாட்டை சுற்றி வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

ஒவ்வொரு முறையும் மன்னர் ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு போகும் போதும், ஓர் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பதும், யானை மேலே நடக்க முடியாமல் நின்று விடுவதும் தொடர்ந்து நடந்து வந்தது.

அந்த இளைஞன் குறித்து மன்னர் விசாரித்த போது, அந்த இளைஞன் சிறு சிறு வேலைகளை செய்து, கிடைப்பதை உண்டு கவலை ஏதுமின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பலம் வாய்ந்த யானையை, ஒரு சாதாரண இளைஞன் எப்படி இழுத்து நிறுத்துகிறான் என்று மன்னர் அமைச்சரிடம் வினவினார்.

அதற்கு அமைச்சர், இதற்கு காரணம் அவனது மன வலிமை என்றார்.

அவனது மன வலிமையை எப்படி மாற்றுவது என மன்னர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அமைச்சர், """"தினமும் அவனுக்கு ஒரு தங்கக் காசு சம்பளம் கொடுங்கள். மாலையில் அருகில் உள்ள திருக்கோயிலில் விளக்கு ஏற்றுவது உன் பணி என்றும், அதற்கான சம்பளமே இந்த தங்கக் காசு என்றும் சொல்லுங்கள்"" என்று கூறினார்.

அந்த இளைஞனுக்கு அவ்வாறே விளக்கு ஏற்றும் பணி வழங்கப்பட்டது.

தினமும் தங்கக் காசு சம்பளம் பெற்றவுடன், எவ்வளவு தங்கக் காசுகள் தன்னிடம் சேர்ந்து இருக்கின்றன என்றும், 100 காசுகள் சேர்க்க இன்னும் எத்தனை நாட்கள் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு மாதம் கழித்து அவ்வழியாக மன்னர் யானை மீது சென்றார். அப்போதும் அந்த இளைஞன் யானை வாலைப் பிடித்து இழுத்தான். ஆனால் யானையை நிறுத்த முடியவில்லை. வாலைப் பிடித்தபடியே யானையின் இழுப்பில் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான்.

இது எவ்வாறு நடந்தது என்று மன்னர் வினவினார். அதற்கு அமைச்சர், """"காசைச் சேர்க்க ஆரம்பித்த உடன் அவனது கவனம் சிதறிவிட்டது. அவனுடைய மனம் பணத்தின் பக்கம் போய்விட்டது. எனவே, அவனது பலம் போய்விட்டது"" என்றார்.

இந்தக் கதையில் வருபவரைப் போல், கருணாநிதியின் மனம் ஸ்பெக்ட்ரம் பக்கம் இருந்ததால், தமிழர் நலன் பற்றி திரு. கருணாநிதி கவலை கொள்ளவில்லை.

இதன் விளைவாக, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது என்ற நிலை மாறி,

புதிய அணை என்ற கோரிக்கையை கேரளா அரசாங்கம் வைத்து, அதற்கான ஆய்வினை மேற்கொள்ள மத்திய அரசும் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டேன்.

என்னுடைய அறிக்கையை பார்த்தவுடன், """"இன்னும் அனுமதி அளிக்கவில்லை"" என்று விதண்டாவாதம் செய்தார் கருணாநிதி. எனது அறிக்கையில் உள்ள உண்மை நிலையைத் தெரிந்து கொண்ட உடன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றார் திரு. கருணாநிதி. பின்னர் ஒரு அந்தர்பல்டி அடித்தார். கேரளா அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார். கடைசியாக அதையும் கைகழுவிவிட்டார் திரு. கருணாநிதி. இது தான், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு நிகழ்த்திய சாதனை, இல்லை,

இல்லை - வேதனை. உதவி செய்கிறோம் என்று சொல்லி உபத்திரவத்தை கொடுத்த ஆட்சி முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி. ஆட்சியில் அமர வைத்த தமிழக மக்களுக்கு துன்பத்தையே கொடுத்த ஆட்சி முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி.

தமக்கு வாழ்வளித்தவர்கள் தமிழர்கள் என்பதை முற்றிலும் மறந்துவிட்டு, தன் குடும்ப நலத்திற்காக தமிழினம் அழிய உறுதுணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல், தமிழர்களின் உரிமைப் பிரச்சனைகளிலும் தட்டிக் கழிக்கும் போக்கையே கடைபிடித்து வந்தார் மு. கருணாநிதி. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைப்பது என்ற பழமொழிக்கேற்ப திரு. கருணாநிதியின் செயல்பாடு அமைந்திருந்தது.

ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள், அந்த ஏழையின் முன் தோன்றி, """"உனக்கு என்ன வேண்டும்?"" என்று கேட்டார்.

அதற்கு, """"பணம், செல்வம், தங்கம், வைரம்"" என்று ஆசையோடு கூறினான் அந்த ஏழை.

உடனே, கடவுள் தனது வலது கை சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமாக மாறியது.

ஆனால் ஏழை எதுவும் பேசாமல் நின்று கொண்டு இருந்தான். கடவுள் மறுபடியும் விரலை நீட்ட, அங்கிருந்த மேஜை தங்கமானது.

அப்போதும் அந்த ஏழைக்கு திருப்தி ஏற்படவில்லை.

உடனே, கடவுள் அந்த அறையில் இருந்த அத்தனைப் பொருட்களையும் வேக வேகமாக தங்கமாக்கினார்.

அப்போதும் அந்த ஏழை சிரிக்கவில்லை.

சோர்ந்து போன கடவுள், """"இன்னும் உனக்கு என்ன தான் வரம் வேண்டும்?"" என்று கேட்டார்.

அதற்கு அந்த ஏழை, """"எனக்கு அந்த விரல் வேண்டும்"" என்றான்.

அந்த ஏழையின் பேச்சைக் கேட்டதும், கடவுள் மயங்கி விழுந்துவிட்டார்.

இந்தக் கதையில் வருவதைப் போல், வாழ்வளித்த தமிழர்களை அழிக்க நினைத்தவர் கருணாநிதி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.

நான் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், காவேரி நதிநீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சனை, பாலாறு நதிநீர் பிரச்சனை ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து, அறிக்கைகளை வெளியிட்டதோடு, பல போராட்டங்களையும் நடத்தி, தமிழர் நலன் காக்கும் நடவடிக்கைகளை அப்போதைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுக்க காரணமாக இருந்தேன்.

இது பற்றி ஒரே ஒரு உதாரணத்தை உங்களிடம் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை விசாரித்துக் கொண்டு இருந்த உச்ச நீதிமன்றம்; இது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் தலைமையில், ஒரு குழுவினை அமைத்து 2010 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டின் சார்பில் அந்தக் குழுவில் ஒரு பிரதிநிதியை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் ஆனால், அப்போதைய மைனாரிட்டி தி.மு.க. அரசு என்ன செய்தது? தமிழ்நாட்டின் சார்பில் பிரதிநிதியை நியமிக்க வேண்டிய தேவையில்லை என 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுவில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது என்ன தி.மு.க.வின் உட்கட்சிப் பிரச்சனையா? இது குறித்து சட்டமன்றத்தில் அல்லவா விவாதித்து முடிவு எடுத்திருக்க வேண்டும்?

தமிழ்நாட்டின் சார்பில் உச்ச நீதிமன்றக் குழுவில் யாரும் நியமிக்கப்படவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பிற்கு எதிரான கேரளா அரசின் திருத்திய சட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக அர்த்தம் ஆகிவிடாதா? தமிழகத்தின் வாதங்களை எடுத்து வைக்க முடியாத ஒரு சூழல் ஏற்படாதா? தமிழகத்தின் சார்பில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொள்ளாதா? இதன் விளைவாக உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு எதிராக அமைந்துவிடாதா? என கேள்விகளை எழுப்பி ஒரு விரிவான அறிக்கையினை நான் வெளியிட்டேன். அதன் பின்னர் தான், வல்லுநர் குழுவில் தமிழ்நாட்டின் சார்பில்,

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் ஏ.ஆர். லட்சுமணன் நியமிக்கப்பட்டார் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மீண்டும் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், இதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு முன்பு தமிழகத்தின் சார்பில் வலுவான, நியாயமான, சட்டப்பூர்வமான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட வலுவான வாதங்களின் அடிப்படையிலும், ஆய்வுகளின் அடிப்படையிலும், குழு தனது அறிக்கையினை உச்ச நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமர்ப்பித்தது.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணைகளின் போது, கேரளா அரசின் சட்டத் திருத்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும் என்றும், அணையின் நீர்மட்டம் முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளதால் புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தமிழகத்தின் சார்பில் ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதங்களின் உண்மை நிலையையும், ஆய்வு அறிக்கையினையும் அடிப்படையாகக் கொண்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நமக்கு கடந்த மே மாதம் வழங்கியது.

அந்தத் தீர்ப்பில், கேரளா அரசின் திருத்தச் சட்டம், முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரையில், அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்றும்,

2006 ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், இதற்கு கேரளா அரசு குறுக்கீடு ஏதும் செய்யக் கூடாது என்றும்; தமிழ்நாடு அரசு அணையின் பராமரிப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், மத்திய நீர்வளக் குழுமம், தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படுவதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து, மூவர் குழுவினை அமைக்குமாறு மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்த மூவர் குழுவின் மேற்பார்வையில், கடந்த 17.7.2014 அன்று, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கும் வகையில், அணையின் அடைப்பான்கள், அதாவது ளுhரவவநசள கீழே இறக்கப்பட்டன.

இதன் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

""சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்

தாழா துஞற்று பவர்க்கு,""

என்றார் வள்ளுவர்.

அதாவது, தம்மைச் சார்ந்த குடிகளின் உயர்வுக்காக காலம் தாழ்த்தாமல் முயற்சிகளை தளராது செய்து கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றிகள் தாமாகவே கைகூடி வரும் என்பது இதன் பொருள்.

என்னைப் பொறுத்தவரை, தமிழக மக்கள் தான் என் மக்கள். அதனால் தான், உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முல்லைப் பெரியாறு அணையில் காலம் தாழ்த்தாமல், அதை என்னுடைய சொந்தப் பிரச்சனையாக கருதி நான் செயல்பட்டேன். நீங்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு நல்கினீர்கள். இது தான் வெற்றியின் ரகசியம். இந்த வெற்றி நமது வெற்றி.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் மீதமுள்ள பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்ட பின்னர், அணையின் முழு நீர்த்தேக்க மட்டமான 152 அடி வரையில், உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் வாழ்வு உயர, விவசாயிகள் வாழ்வு வளர, அனைத்து தமிழர்கள் வாழ்வு உயர இடையறாது உழைத்துக் கொண்டே இருப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொண்டு,

இன்று எப்படி மழை பொழிந்ததோ அதுபோல் இந்த மேடையில் பாராட்டு மொழிகளும் பொழிந்தன என்பதை தெரிவித்து, அதற்கான எனது உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டு இந்தப் பாராட்டு மொழிகளுக்கு ஏற்றவளாக இருப்பேன், நான் தொடர்ந்து பாடுபடுவேன் என்பதையும் தெரிவித்து, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்