முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்துக்கு 100 பேர் பலி

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable


லக்னோ, ஆக 24 - உத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் மத்திய மாவட்ட பகுதியில் ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பஹாராய்ச், கோண்டா, பல்ராம்பூர், ஷராவதி, சீதாபூர், கோரக்பூர், பாஸ்தி போன்ற மாவட்டங்களில் கடுமையான வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பஹாராய்ச் மாவட்டத்தில் வெள்ளத்தில் ரயில் தண்டவாளம் சேதமடைந்ததால் வடகிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ரயில் பாதைகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ராப்தி, காக்ரா, சராயு நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரை பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சீதாபூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மழைக்கு 7 பேர் பலியானார்கள். இதையடுத்து உத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்துக்கு பலியானாவர்கள் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது. உத்தரபிரதேச மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். மாநில அரசுக்கு வெள்ள நிவாரணத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக ராஜ்நாத்சிங் மாநில அரசு அதிகாரிகளுடன் வெள்ள சேதம் பற்றி ஆலோசனை நடத்தினார். இதில் வாரனாசி மற்றும் கோரக்பூர் பகுதிக்கு வெள்ள மீட்பு குழுவை சேர்ந்த 2 படைகள் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதே போல் நேபாளத்தில் பெய்யும் மழை காரணமாக பீகாருக்குள் வெள்ளம் திருப்பி விடப்பட்டதால் கங்கை உள்ளிட்ட அனைத்து ஆளுகளிலும் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு குவிண்டால் உணவு தானியமும், ரூ. 2 ஆயிரம் உதவி தொகையும் வழங்கப்படும் என்று தேசிய பேரிடர் நிர்வாக துறை அதிகாரி விபின்குமார் ராய் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்