முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைகளுக்கு வங்கி கணக்கு: பிரதமர் துவக்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை: ஆக. 27 - ‘வங்கி கணக்கு இல்லாத ஏழைகள் அனைவருக்கும் வங்கி கணக்குகள் தொடங்கப்படும்’ என்று பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் அறிவித்தார்.வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு தொடங்கும் பிரதமரின் மக்கள் திட்டத்தை (ஜன்தன் யோஜனா) நாளை ( 28–ந்தேதி மாலை ) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.அன்று டெல்லியில் பிரதமர் இந்த திட்டத்தை தொடங்கும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்ட ‘ஜன்தன் யோஜனா’ திட்டம் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா அரங்கில் தொடங்கப்படுகிறது. இதற்காக இங்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 550 பாங்கி கிளைகளுக்கான முகாம் அமைக்கப்படுகின்றன. அந்த அரங்குகளில் உள்ள பாங்கி ஊழியர்கள் மூலம் பொதுமக்கள் வங்கி கணக்கு தொடங்கலாம்.காஞ்சீபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள வங்கிகளிலும் கணக்கு தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கி வைக்கும் அதே நேரத்தில் காஞ்சீபுரத்திலும் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.

இதையொட்டி அன்றைய தினம் அனைத்து வங்கி கிளைகள் சார்பிலும் குறிப்பிட்ட சிலருக்கு கணக்கு தொடங்கியதற்காக வங்கி கணக்கு புத்தகம் வழங்கப்படுகிறது. அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகளும் வழங்கப்படுகிறது.

இது தவிர கணக்கு தொடங்கும் ஏழைகளுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீட்டிற்கான ‘ரூபே டெபிட்’ கார்டுகளும் வழங்கப்படுகிறது. இந்த வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் முதியோர் ஓய்வூதியம் போன்றவற்றையும் பெற முடியும்.இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு இல்லாத அனைவரும் வங்கிகளில் எளிதாக கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கும் ஏழைகளுக்கு ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கப்படும். வங்கி கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் கணக்குதாரர்கள் டெபிட்கார்டு மூலம் எந்த ஒரு ஏ.டி.எம்.மிலும் பணம் எடுக்கலாம். இந்தியாவின் எந்த பகுதிக்கும் சுலபமாக பணம் அனுப்பலாம். இந்த கணக்கு வைத்திருப்பவர் அரசு திட்டங்களைப் பெறும் தகுதி உள்ளவராக இருந்தால் அதற்கான தொகையை வங்கி கணக்கு மூலம் நேரடியாக பெறலாம்.

ஆறு மாதங்கள் வங்கி கணக்கை நல்ல முறையில் பராமரித்தால் கூடுதல் (ஓவர்டிராப்ட்) பணம் பெறும் வசதி கிடைக்கும். பென்ஷன், இன்சூரன்சு போன்றவற்றை இதன் மூலம் பெறலாம்.

பிரதமரின் ‘ஜன்தன் யோஜனா’ வங்கி கணக்கை தொடங்குவதற்கு ஆயத்தமாக தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் உதவியுடன் வங்கி கணக்கு தொடங்க ஆதார் அட்டை அல்லது ஆதார் எண் இருந்தால் போதும். வேறு ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை.

ஆதார் அட்டை முகவரி மாறி இருந்தால் தற்போதைய முகவரி சான்றிதழ் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அங்கீகாரம் பெற்ற அமைப்பின் அத்தாட்சி கடிதம், மின்சார அல்லது தொலைபேசி பில் இவைகளில் ஒன்றை கொடுக்க வேண்டும். பிறப்பு அல்லது திருமண சான்றிதழ் வழங்க வேண்டும்.

கணக்குகளை தொடங்க வங்கிகளால் நடத்தப்படும் முகாம்களில் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு, ஆதார் அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்கை தொடங்க வேண்டியவர்கள் இந்த முகாம்களை அல்லது அருகில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ளலாம்.

 

.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்