முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணத்தில் ரூ43.78 கோடி மதிப்பீட்டில் பணிகள்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.28 - கும்பகோணம் நகரில் நடைபெறவுள்ள மகாமகம் பெருவிழாவையொட்டி இந்நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில்,43.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புறங்களில் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குதிலும், பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரினை வழங்குவதிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திட்டங்களை தீட்டிச் செயல்படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

கோயில்கள் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம் நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில், 35 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் இதரப் பணிகள் என 234 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் நகரில் நடைபெறவுள்ள மகாமகம் பெருவிழாவையொட்டி இந்நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில்,

2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்ப் பணிகளும், 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்கு அமைக்கும் பணிகள் மற்றும் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், 10 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள், 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேரோடும் வீதி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார சந்துகளை மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுமட்டுமல்லாமல், 11 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவறைகளை மேம்படுத்தும் பணிகள், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலக்காவேரி ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் 43.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்காணும் நடவடிக்கைகள், , கும்பகோணம் நகராட்சிசார்ந்த மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுசூழல் நிலவவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்