முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக. 29 – சென்னை மாநகராட்சிக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தந்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று முதல்வருக்கு சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

சட்டசபையில் விதி 110–ன் கீழ் மக்கள் நல திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து, அந்த விதிக்கு பெருமை தேடி தந்திருக்கிறார் என்று மேயர் சைதை துரைசமி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சென்னைக்கு மட்டும் விதி 100–ன் கீழ் 100–க்கும் மேற்பட்ட திட்டங்களை தந்திருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.

சென்னை மாநகராட்சிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தந்துள்ள திட்டங்கள் ஒவ்வொன்றையும் மேயர் மாமன்ற கூட்டத்தில் கூறியபோது, உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்தனர்.

மாமன்ற கூட்டம் நேற்றுமேயர் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:–

முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் விதி 110ன் கீழ் அற்புதமான அரிய பல திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

ஏழைஎளிய மக்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் சிறப்பு மிகுந்த இத்திட்டங்களைத் தமிழகத்திற்கு வழங்கியுள்ள முதல்வருக்கு நன்றி கூறிப் பாராட்ட வேண்டியது, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

இதன் அடிப்படையில் முதல்வர் அறிவித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து, அனைத்து 110 விதியின்கீழ் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அம்மா அறிவித்த திட்டங்களை பதிவு செய்வதில் மிக்க பெருமையடைகிறேன்.

அறிவாற்றலும் செயலாற்றலும் இரண்டறக் கலந்து, இரக்கமும் கருணையும் இணைபிரியாது இணைந்து, திறமையும் நுண்ணறிவும் செயல்வடிவாய்ச் சேர்ந்து, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி தமிழக மக்களைக் காத்தருளும் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் முதலமைச்சர் .

மக்கள் நலனைக் கருத்தில் இருத்தி, திட்டங்கள் வகுப்பதில் திறமை, வகுத்த திட்டங்களை செயல்படுத்துவதில் திறமை, செயல்படுத்தும் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதில் திறமை, எல்லாவற்றுக்கும் மேலாக அத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு நிறைந்த பயன் தரும் வகையில் நிறைவேற்றுவதில் திறமை, என, உலகத் திறமைகள் அனைத்தின் இருப்பிடமாய்த் திகழ்பவர் முதலமைச்சர் அம்மா.

முதலமைச்சர் அம்மா அறிவார்ந்த சிந்தனையும் ஆற்றல்மிகு செயல்திறனும் கொண்டு ஈகையும் இரக்கமும் பரிவும் கருணையும் கலந்து மனித நேயமும் மக்கள் கண்ணோட்டமும் என தனது பன்முக ஆற்றலால் எல்லா நிலையிலும் எல்லா பிரிவிலும் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு திட்டங்களை வகுத்து, தொகுத்து செயல்படுத்தி வருகிறார்.

அப்படி திட்டங்களை நிறைவேற்ற முதலமைச்சர் அம்மா கையாண்ட ஓர் ஆயுதம் தான், 110.

தமிழக மக்களின் இதயங்களில் இன்பத்தையும், முகங்களில் மகிழ்ச்சியையும் வரவழைக்கும் சக்தி ஒரு எண்ணுக்கு இருக்கிறது என்றால் அந்த எண். 110.

அதேபோல, வகை தொகை இல்லாமல் பேசுகின்ற எதிர்க்கட்சிகளுக்கும், வரைமுறை இல்லாமல் செயல்படும் எதிரிக் கட்சிகளுக்கும் அடி வயிற்றில் நெருப்பை மூட்டி அய்யோ என்று அலற வைக்கும் வலிமை ஒரு எண்ணுக்கு இருக்கிறது என்றால் அந்த எண். 110

அது சாதாரண 110 அல்ல! விதி 110.

முதலமைச்சர் சட்டமன்ற கூட்டத் தொடரின்போது தினம் தினம் மக்கள் நலனுக்கான மகத்தான திட்டங்களை அறிவிக்கும் விதி 110.

விதி என்றால் அது நிர்மாணிக்கப்பட்ட வரம்பு. இந்த நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் எல்லையில்லா திட்டங்களையும், எண்ணில் அடங்கா பயன்களையும் அள்ளித்தரும் விதியாக அதனை மாற்றியவர் முதலமைச்சர் அம்மா.

இதுவரை எந்த முதலமைச்சரும் செய்யாத வகையில் விதி 110க்கு ஒரு பெருமையை ஏற்படுத்தித் தந்தவர் முதலமைச்சர் அம்மா.

விதி வலியது என்பார்கள். விதியை வெல்ல முடியாது என்பார்கள். அதே நேரம் அந்த விதியை மதியால் வெல்லலாம் என்றும் சொல்லுவார்கள். ஆனால் அந்த விதியை விதியால் வெல்லுகிற வித்தகராய் முதலமைச்சர் அம்மா திகழ்கிறார்.

முதலமைச்சர் அம்மா, சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி 110ன் கீழ் வெளியிடும் ஒவ்வொரு அறிக்கையும் ஏழை எளிய மக்களின் தலைவிதியை மாற்றி அவர்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளாகத் திகழ்கின்றன.

இன்றைக்கு பலர் தவிக்கிறார்கள். விதி 110ஐ இப்படியெல்லாம் பயன்படுத்துகிற மதி நுட்பம் தங்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று கலங்கி போய் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய அரிய வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்த தவறி விட்டோமோ என்று மனம் நொந்து போயிருக்கிறார்கள். அந்த வேதனையின் விளைவாக விதி 110ல் இதை அறிவிக்கலாமா அதை அறிவிக்கலாமா என்று கூப்பாடு போடுகிறார்கள்.

ஆனால், புதிய புதிய முயற்சிகளை மக்கள் மேற்கொள்ளும் வகையில், புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்ற உன்னத திட்டங்களை, விதி 110 அறிக்கைகள் உள்ளடக்கமாய்க் கொண்டு, தமிழ்நாட்டின் மேம்பாட்டில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால்தான், சட்டமன்றம் நடக்கும் ஒவ்வொரு நாளும், முதலமைச்சர் அம்மா, இன்றைக்கு விதி 110ன் கீழ் என்ன அறிக்கை வெளியிடப்போகிறார், எந்த புதிய திட்டத்தை அறிவிக்கப் போகிறார்" என்று தமிழக மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் அம்மா திட்ட அறிவிப்பை வெளியிட்டதும் மனம் மகிழ்ந்து தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்கள்.

முதலமைச்சர் அம்மா, அண்மையில் முடிந்த இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் விதி 110ன் கீழ் 42 அறிக்கைகள் வெளியிட்டு அதன் வாயிலாக 277க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒப்பற்ற வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் ரூ.39,911 கோடி அளவுக்கு புதிய திட்டங்களை, முதலமைச்சர் அம்மா சட்டமன்றத்தில் இந்தக் கூட்டத் தொடரில் மட்டும் விதி 110ன் கீழ் அறிவித்துள்ளார்.

இதில் நமது சென்னை மாநகரின் மேம்பாட்டுக்காகவும், வளர்ச்சிக்காகவும் ரூ. 5000 கோடிக்கும் மேலான பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அம்மா அறிவித்துள்ளார்.

அதில் குறிப்பாக சென்னை மாநகருக்கும் மாநகர மக்களுக்கும் நேரடிப் பயனளிக்கும் சில திட்டங்களை மட்டும் எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

* ரூ.1101.43 கோடி செலவில் சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வடிநிலத்தில் நடப்பாண்டில் எடுத்துக் கொள்ளப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் செயல்படுத்த ஆணை.

* ரூ.825 கோடியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் சென்னை மாநகரிலும் இதர பிற நகரங்களிலும் 10 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்புகள்.

* புதிதாக விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறையின் 250 கிலோ மீட்டர் சாலைகளில் மொத்தம் ரூ.1033 கோடி செலவில் விளிம்பு வரை அகலப்படுத்தும் பணிகள், வடிகால் வசதியுடன் கூடிய நடைபாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளவும் இந்த ஆண்டு ரூ. 250 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ள ஆணை.

* ரூ.48.06 கோடியில் நொச்சிக்குப்பம் பகுதியில் மிகவும் பழுதடைந்த 534 குடியிருப்புகள் மீண்டும் கட்டித் தர ஆணை.

* ரூ. 63.25 கோடியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்காக கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பல அடுக்குமாடி அலுவலகக் கட்டடம்.

* சென்னை மாநகரின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மேற்கு மாம்பலத்தில் ரூ.92.83 கோடியில் ஒரு துணை மின் நிலையமும், போரூரில் ரூ.245.25 கோடியில் ஒரு துணை மின் நிலையமும் இரண்டு 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் மொத்தம் ரூ 338.08 கோடி செலவில் அமைத்திட ஆணை.

* சென்னை மாநகர மக்களின் பயன்பாட்டிற்காக 100 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ரூ.16.75 கோடியில் மேலும் 100 புதிய சிற்றுந்துகள் சென்னை மாநகரில் உள்ள, பல்வேறு வழித் தடங்களில் இயக்கிட ஆணை.

* ரூ.23 கோடியில், காமராஜ் சாலையில் காந்தி சிலை அருகில்; புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் கோவில் தெரு; அயனாவரம் – கொன்னூர் நெடுஞ்சாலை; வடபழனி – என். எஸ். கே. சாலை; கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி சாலை; அரும்பாக்கம் உள்வட்டச் சாலையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் அருகில்; ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஆலந்தூர் ஆகிய ஏழு இடங்களில் சுரங்க நடைபாதைகள்.

* ரூ. 185.50 கோடியில் மேடவாக்கம் மற்றும் கீழ்க்கட்டளையில் இரண்டு பல்வழிச்சாலை மேம்பாலங்கள்

* ரூ.50 கோடியில் தெற்கு உள் வட்ட சாலையில் வாகன சுரங்கப் பாதை.

பாலங்கள்

* ரூ.58 கோடியில் பருத்திப்பட்டு, ராமாவரம் மற்றும் நொளம்பூர் அருகே மூன்று உயர்மட்ட பாலங்கள்

* ரூ.12 கோடியில் தாம்பரம் ரெயில்வே நிலையத்திற்கு அருகில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய ஒரு நடை மேம்பாலம்

* ரூ. 40 கோடியில் வேளச்சேரி பறக்கும் இரயில் நிலையத்தின் மேல் 1 லட்சத்து 11 ஆயிரம் சதுர அடி பரப்பில், இரண்டு தளம் கொண்ட அலுவலக வளாகம்

* ரூ.9 கோடியில் சென்னை கிண்டியிலுள்ள அரசுத் தொழில்நுட்பப் பயிற்சி மையத்திற்கு 30ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கூடுதல் கட்டடம்

* ரூ.120 கோடியில் ஒரகடம் தொழிற்பூங்கா பகுதியில் சிங்கபெருமாள் கோயில் முதல் ஒரகடம் வரை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள்

* ரூ. 2.50 கோடியில் சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பழந்தமிழரின் சிறப்புக்களையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக் காட்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்

* ரூ.30 லட்சம் செலவில் வேளச்சேரி நீச்சல்குள வளாகம், செனாய் நகர் நீச்சல் குளங்களில் நிறுவப்பட்டுள்ள வடிகட்டும் நிலையங்களை மாற்றி ஓசோன் சுத்திகரிப்புடன் கூடிய புதிய வடிகட்டும் நிலையங்கள்

விளையாட்டில்…

* ரூ 18.03 கோடியில், சென்னைக்கு அருகில் உள்ள மேலக்கோட்டையூரில் இயங்கி வரும் விளையாட்டு மற்றும் உடற் கல்விக்கான தனிப் பல்கலைக்கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை அளிக்கும் வகையில், நூலக அறை, ஆய்வுக்கூடம், கூட்டரங்கம் மற்றும் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம்

* ரூ.30.70 கோடியில், சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் பயிலும் இளநிலை மாணவ, மாணவியர்களுக்கென புதிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; குரோம்பேட்டை Madras Institute of Technologyக்கு என நிருவாகக் கட்டடம் மற்றும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்கென புதிய விடுதிக் கட்டடங்கள்.

* ரூ.255 கோடியில் கழிவு நீரை மறு சுழற்சி செய்து குடிநீர் அல்லாத பிற தேவைக்கு பயன்படுத்துவதற்காக கொடுங்கையூரில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம்

* ரூ. 60 கோடியில் சென்னை நகரில் 70 வணிகவரி அலுவலகங்களை உள்ளடக்கிய அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த இரண்டு வணிக வரி அலுவலகங்கள்

* ரூ.1.38 கோடியில் சென்னை எழிலகத்தில் இயங்கி வரும் வணிகவரி ஆணையர் அலுவலகம்

* ரூ. 50 கோடியில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் புற நோயாளி பிரிவு, முடக்கியியல் பிரிவு, சிறு நீரகவியல் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் சிறு நீரகவியல் மருத்துவப் பிரிவு ஆகியவற்றிற்கு அடுக்கு மாடிக் கட்டடம்

* ரூ. 6 கோடியில் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவியர்கள் தங்கிப் படிக்க, நடப்பாண்டில் புதிய விடுதிகள்.

* ரூ. 5 கோடியில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன்.

* ரூ.19.62 கோடியில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆய்வக வசதி மற்றும் பல்வேறு பரிசோதனைகளுக்கான வசதிகளுடன் கூடிய 15 நகரும் மருத்துவமனைகள், பிற மாவட்டங்களில் 35 நகரும் மருத்துவமனைகள் என மொத்தம் 50 நகரும் மருத்துவமனைகள்.

* ரூ.105 கோடியில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், 5 இடங்களில் தலா 1,000 தொழிலாளர்கள் தங்கும் வகையிலும், திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தலா 500 தொழிலாளர்கள் தங்கும் வகையிலும் என மொத்தம் 7,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 9 இடங்களில் படப்பிடிப்பு தளங்கள்.

* ரூ. 15 கோடியில் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் அதி நவீன வசதிகளுடன் கூடிய முழுவதும் குளிரூட்டப்பட்ட இரண்டு படப்பிடிப்புத் தளங்கள்

* ரூ.21.59 கோடியில் சென்னை, அரசு மைய அச்சகத்திற்கு புதிய நிரந்தரக் கட்டடம்.

* ரூ.2.50 கோடியில் சென்னை, அரசு மைய அச்சகத்தின் புத்தகம் கட்டும் பிரிவிற்காக தானியங்கி புத்தகம் தைக்கும் யந்திரம்.

என, 5000 கோடி ரூபாய்க்கும் நிதி ஓதுக்கீடு தந்து, சென்னை மாநகருக்கு முழுமையாக நேரடிப் பயனைத் தரும் 110க்கு மேற்பட்ட திட்டங்களை முதலமைச்சர் அம்மா விதி 110ன் கீழ் அளித்துள்ளார்.

சென்னை மாநகருக்கு பெரும் பயன் அளிக்கும் இத்திட்டங்களை வழங்கியுள்ள முதலமைச்சர் அம்மாவுக்கு சென்னை மாநகராட்சி மாமன்றம் சிரம் தாழ்த்தி தனது இரு கரம் கூப்பி, நன்றி தெரிவித்து, தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்