முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டங்கள் வங்கிகள் மூலம் வழங்க முதல்வர் அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.29 - தமிழகத்தைப் பொறுத்த வரை அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை வங்கிகள் மூலமாக வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார் என்று நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு என்ற புதிய திட்டத்தை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (பிரதமர் மக்கள் நிதித்திட்டம்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 60 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு ஏழைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கப்படுகிறது.சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் 40 ஆயிரம் பேருக்கு வங்கி கணக்கு தொடங்க திட்டமிட்டுள்ளனர்

இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்கும் ஏழைகளுக்கு ரூ. 1 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும். வங்கி கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வாடிக்கையாளர்கள் தங்கள் ‘டெபிட்’ கார்டு மூலம் நாடு முழுவதும் உள்ள எந்த வங்கி ஏ.டி.எம். மூலமும் பணம் எடுத்து கொள்ளலாம்.

மாநில அளவிலான துவக்க விழா சென்னை ராணி சீதை அரங்கில் நேற்று நடந்தது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தா. கவர்னர் ரோசையா, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றார்கள்..

விழாவில் நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது :

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் வங்கிகளின் மூலம் நிதிச் சேவையினை பெற்றிடும் பொருட்டு துவங்கப்பட்டுள்ள பிரதம மந்திரி மக்கள் நிதிச் சேவைத் திட்டத்தினை தமிழ்நாட்டில் துவக்கி வைக்கும் இவ்விழாவில் கலந்துகொள்ள எனக்கு அனுமதி அளித்துள்ள எங்கள் இதய தெய்வம், தமிழகத்தின் விடிவெள்ளி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘நாடென்ப நாடா வளத்தன’ என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. இதற்கொப்ப, எல்லோரும் எல்லாமும் பெற்று, தமிழ்நாடு வளம் பெற, அல்லும் பகலும் அயராது உழைத்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற அண்ணாவின் வழி நின்று ஏழை, எளிய மக்களை வாழவைக்கும் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். எனவேதான், தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டின் மேம்பாட்டிலும், ஏழை, எளிய மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியிலும், முதலமைச்சர் அம்மா அவர்கள், எந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை, அவர்களின் கீழ்க்கண்ட வார்த்தைகளே வெளிப்படுத்துகின்றன:

""""தமிழ்நாடு ஓர் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெறவேண்டும். அதற்கு ஒவ்வொரு குடும்பமும் சமூக பொருளாதார வளர்ச்சியின் அனைத்து அங்கங்களிலும் முன்னேற வேண்டும், வளர்ச்சி பெற வேண்டும். ஏழை எளியோர், ஆதரவற்றோர், முதியோர், விதவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தின் அடித்தளத்து மக்களுக்கு கைகொடுத்து, அவர்களை உயர்த்த வேண்டும் என்பதில் நான் அளவற்ற அக்கறை கொண்டுள்ளேன்.""

இதனால்தான், ஆதரவற்ற முதியோர்களுக்கும், விதவைகள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி, கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால நிதியுதவியாக ரூபாய் 12 ஆயிரம், ஏழை பெண்கள் திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் தாலிக்கு 4 கிராம் தங்கம் மற்றும் இளநிலை பட்டம் பெற்ற மகளிருக்கு 50 ஆயிரம் ரூபாய், மற்ற மகளிருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, பெண் குழந்தை கல்வியை ஊக்குவிக்க நிதியுதவி, ஏழை குடும்பங்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் என ஏழை, எளிய மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக பல திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.

ஒரு நாட்டின் பொருளாதார நிலை மேம்பட வேண்டும் என்றால் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும். ஏழை, எளியோர், ஆதரவற்றோர், அரசின் பல்வேறு திட்டங்களை முழுமையாகப் பெற்று, பயன் அடைய உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவற்றை எல்லாம் பெற வேண்டும் என்றால், வங்கிகளின் சேவையைப் பெறுவது மிக முக்கியம். அந்த வகையில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமெனில், ஏழை, எளிய மக்கள் அரசின் மானிய உதவியுடன் தொழில் தொடங்குவதற்கு வங்கிகளிடமிருந்து நிதி உதவி பெறுவது முதல் அனைத்து பயன்களையும், அவர்கள் வங்கிகள் மூலம் பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை பாதுகாப்பாக வைக்க, வங்கிக் கணக்குகள் பேருதவியாக இருக்கும். இதனால் அரசின் உதவியும் விரையமின்றி, முழுமையாக மக்களைச் சென்றடையும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், ஏழை, எளிய மக்களும் வங்கிக் கணக்குகள் மூலமாகவே, ஓய்வூதியம் பெற்று, பயனடைய வேண்டும் என்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் தலைமையில், மூன்றாவது முறையாக அம்மா அவர்களின் அரசு பொறுப்பேற்ற உடனே, 2011-12 ஆம் ஆண்டிலேயே, ஓய்வூதியத் தொகை வங்கிகள் மூலமாக வழங்கப்பட வேண்டும் என அம்மா அவர்கள் உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில், இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள், முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்த வரை அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு ஓய்வூதியத் திட்டங்கள், திருமண உதவித் திட்டங்கள், கர்ப்ப கால, மகப்பேறு உதவித் திட்டங்கள், மாணவ, மாணவியர் படிப்பிற்கான உதவித் தொகைகள், விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டங்கள் போன்ற பல திட்டங்களுக்கான நிதி, வங்கிக் கணக்குகளின் மூலமாகவே பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார்கள். இதனடிப்படையில்தான் 2012-13, 2013-14 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட 1300 கோடி ரூபாய்க்கு மேலான பயிர் இழப்பிற்கான வறட்சி நிவாரண உதவிகளும், வங்கிக் கணக்குகள் மூலமாகவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே இத்தகைய அதிகமான நிதியுதவியை, குறுகிய காலத்தில் வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சென்ற ஆண்டு மட்டும் பள்ளி மாணவ, மாணவியருக்கான படிப்பு உதவித் தொகை, 800 கோடி ரூபாய்க்கு மேலாக வங்கிகள் மூலமாகவேஅம்மா அவர்களது அரசு வழங்கியது.

இதே கொள்கையின் அடிப்படையில்தான், இன்று பிரதம மந்திரி அவர்களின் மக்களின் நிதிச் சேவைத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும், ஒவ்வொரு குடும்பமும் ஒரு வங்கிக் கணக்காவது தொடங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சுரஞயல ஊசநனவை ஊயசன வசதியும், 5000 ரூபாய் வரை கடன் வசதி பெறும் வாய்ப்பும், ஒரு லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீட்டு உதவி பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. ஏழைகளின் மீது பரிவும், பாசமும் கொண்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் இத்திட்டத்தினை வரவேற்று, செயல்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஆணையிட்டுள்ளார்கள். இந்தத் திட்டம் மாண்புமிகு அம்மா அவர்கள் அரசு மேற்கொண்டு வரும் இதுபோன்ற முயற்சிகளை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

6) இத்திட்டத்தைச் செயல்படுத்தும்போது சில பிரச்சினைகளை வங்கிகள் எதிர்கொள்ள நேரிடும். அவற்றை ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டு கவனமாகக் கையாள்வது அவசியம் எனக் கருதுகிறேன். பல்வேறு குக்கிராமங்கள் இன்னும் வங்கி சேவை வசதிகளைப் பெறவில்லை. இத்தகைய பகுதிகளில் வங்கிகளின் கிளைகளை அமைப்பது என்பதும் சாத்தியம் இல்லை. இப்பகுதிகளில், குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வங்கிகளின் சேவையை முழுமையாகப் பெற, வங்கித் தொடர்பாளர் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இத்தகைய வங்கித் தொடர்பாளர்களும் போதுமான அளவில் தற்போது இல்லை. எனவே, வாய்ப்பு உள்ள இடங்களில் கூடுதல் வங்கிக் கிளைகளைத் திறப்பதுடன், வங்கித் தொடர்பாளர்களின் எண்ணிக்கையையும் உரியவாறு உயர்த்தி, வங்கிச் சேவைகள் பயனாளிகளின் வீட்டு வாசல்களை எட்டும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு அம்மா அவர்கள் அரசின் வேண்டுகோள். ஏனெனில், அன்றாடம் தாங்கள் பெறும் கூலியை வைத்து வாழும் ஏழை எளிய மக்கள் நெடுதூரம் சென்றோ அல்லது தாங்கள் பொருள் ஈட்டும் நேரத்தை வீணடித்தோ, வங்கிச் சேவைகளைப் பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

மேலும், கூட்டுறவு வங்கிகளையும் இந்த முயற்சியில் இணைத்துக் கொள்வது அவசியம் எனக் கருதுகிறேன். எனவே, இந்தத் திட்டம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டுமெனில் வங்கிச் சேவைகள் ஏழை, எளிய மக்களின் வீடு தேடி வரும் நிலையை ஏற்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் நான் நம்புகிறேன்.

இந்தப் புதிய திட்டம், ஊழலுக்கு இடம் அளிக்காத வகையில், பல்வேறு நலத் திட்ட உதவிகள், மக்களைச் சென்றடைய வழி வகுக்கும் என்ற வகையில், மாண்புமிகு அம்மா அவர்களது தலைமையிலான தமிழக அரசு, இத்திட்டத்தை வரவேற்கிறது. பொருளாதார மற்றும் சமூக ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு, வங்கிச் சேவையை அறிமுகப்படுத்தி, முறையற்ற நிதி நிறுவனங்களின் பிடியிலிருந்து அவர்களை விடுவித்து, முறையான வங்கிச் சேவைகள் மூலம் சேமிப்பு, கடன் வசதி போன்ற சேவைகளை அவர்கள் பெறுவதற்கும் இத்திட்டம் வழிவகுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இத்திட்டம் சமுதாயத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறேன். எனவே, இத்திட்டம் வெற்றி அடைய, என் வாழ்த்துக்களுடன், மாண்புமிகு அம்மா அவர்களது அரசு அனைத்து உதவிகளையும் நல்கும் என்பதையும், தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

நிறைவாக, இந்தத் துவக்க விழாவில் கலந்து கொள்வதற்கு எனக்கு அனுமதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் நன்றியைத் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்