முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஜன் தன் யோஜனா' திட்டம்: பிரதமர் மோடிதொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.29 - 'பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா' என்ற பெயரில், வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்க வகை செய்யும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, வறுமையை ஒழிக்க நிதித் தீண்டாமை முதலில் அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏழை மற்றும் பின் தங்கிய மக்கள், அரசுநலத்திட்டங்கள் மூலம் பயன்பெறும் வகையில், 15 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்க திட்டமிடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார்.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்துடன், அந்த கணக்கின் சேவைகளைப் பெறுவதற்கான செல்ஃபோன் வங்கிச் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

அதன்படி, ஜன் தன் திட்டத்தில் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளின் வாடிக்கையாளர்கள் *99# என்ற எண்ணில் கணக்கு விவரங்களை அறிய வசதி செய்யப்பட்டிருக்கிறது.

ஜன் தன் யோஜனா திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியதாவது:-

"நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன பிறகும் நாட்டின் மக்கள் தொகையில் 68 சதவீதத்தினர் வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கின்றனர். குறுகிய காலத்தில் இந்த திட்டத்தை தொடங்கியது அரசின் சாதனையாகும்.

மக்களின் நம்பிக்கை அடிப்படையில் இந்த அரசு செயல்படுகிறது. இந்த திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து பெரிய திட்டங்களை தொடங்க அரசுக்கு நம்பிக்கை கிடைக்கும்.

வங்கித் துறை மட்டுமின்றி காப்பீட்டுத் துறை வரலாற்றிலும் இந்த திட்டம் சிறப்புமிக்கது. இந்தத் திட்டத்தில் அளிக்கப்படும் 1 லட்ச ரூபாய் காப்பீடு காரணமாக, குறுகிய காலத்தில் பல கோடி காப்பீட்டு பாலிசிகள் தொடங்கப்படவுள்ளது.
இந்தியக் காப்பீட்டுத் திட்ட வரலாற்றில் ஒரேநாளில் 1.5 கோடி பேருக்கு விபத்துக் காப்பீடு வழங்கியதில்லை. இன்று 1.5 கோடி பேர் கணக்குத் தொடங்கியுள்ளனர். இது ஒரு பெரிய சாதனை.
வங்கிக் கணக்குத் தொடங்கப்படுவது என்பது நாட்டின் பொருளாதார மைய நீரோட்டத்துடன் ஒன்று கலக்கும் ஒரு விஷயம் இதன் மூலம் நிதித் தீண்டாமை அகற்றப்பட முதல் கட்ட நடவடிக்கையாக இத்திட்டம் அமைந்துள்ளது. 2000 பேர்களுக்கும் மேல் உள்ள கிராமங்களில் வங்கிகள் தொடங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்குபவர்களுக்கு ஜனவரி 26ஆம் தேதி வாக்கில் ரூ.30,000த்திற்கான காப்பீடு வழங்கப்படுவதுடன் ரூ.1.லட்சம் வரையிலான விபத்துக் காப்பீடும் அளிக்கப்படும்.
இந்தியாவிற்காக இந்தத் திட்டத்தில் ‘ருபே கார்டை’ அறிமுகம் செய்கிறோம், இது உலக அளவில் செல்லுபடியாவது.
வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக பணப் பரிவர்த்தனை செய்யப்படுவது ஊழலையும் முறைகேடுகளையும் ஒழிப்பதற்கு சிறந்த ஆயுதமாகும்.
இந்த ஜன் தன் யோஜனாத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய 7 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
அதிக புதிய கிளைகள் திறக்கப்படும், அதனால் வேலை வாய்ப்புகள் உருவாகும். இத்திட்டத்தினை முன்னெடுத்து செல்ல புதிய உள்கட்டமைப்பு அமைக்கப்படும்.
தபால் அலுவலக உள்கட்டமைப்பு வசதிகள் வங்கி துறையில் பயன்படுத்தப்படும்.
இந்த முழு திட்டமும் ஏழைகளுக்கானது. ஏழ்மையை இந்தியாவை விட்டு விரட்டும் நடவடிக்கையாகும். வங்கி கணக்கு தொடங்குபவர்கள் ஜனவரி 26-ஆம் தேதிக்கு ரூ. 30 ஆயிரம் காப்பீடு பெறுவார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் நரேந்திர மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்