முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.4 கோடி மதிப்பில் துப்பாக்கி சுடும் தளங்கள்: முதல்வர்

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஆக.30 – கோயம்புத்தூர் மற்றும் மதுரை பகுதிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தலா 2 கோடி ரூபாய் வீதம் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு வளாகத்திலும் மின்னணு வசதிகளுடன் கூடிய 15 தடங்கள் கொண்ட துப்பாக்கி சுடும் தளங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அனைத்து மனிதர்களும் இயல்பாக விரும்பி ஈடுபடும் செயற்பாடுகளில் ஒன்றான விளையாட்டினை மேம்படுத்துவதிலும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும், இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்கும் வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

நான் முதன் முறையாக முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் உலகத் தரம் வாய்ந்த ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பல்நோக்கு உள்விளையாட்டரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கம் மற்றும் வேளச்சேரி நீச்சல் குள வளாகம் ஆகியவை எனது அரசால் உருவாக்கப்பட்டன. தமிழக இளைஞர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சாதனை புரிய ஏதுவாகவும், விளையாட்டு ஆர்வத்தை இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் வகையிலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்னால் உருவாக்கப்பட்டது. நான் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, ஒருங்கிணைந்த துப்பாக்கி சுடும் கட்டமைப்பு வசதி உட்பட விளையாட்டை மேம்படுத்தும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2011 ஆம் ஆண்டு துப்பாக்கி சுடும் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச அளவில் பதக்கம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டது. 2013 ஆம் ஆண்டு """"ஃபிடே"" உலக சதுரங்க வாகையர் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

விளையாட்டுத் துறையில் எனது தலைமையிலான அரசு எடுத்து வரும் முனைப்பான நடவடிக்கைகள் காரணமாக, 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர். இவர்களை நான் பாராட்டி, உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் வழங்கி சிறப்பித்தேன்.

அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்றெடுத்த 64 பதக்கங்களில், 17 பதக்கங்கள் துப்பாக்கிச் சுடும் போட்டிகள் மூலம் கிடைத்தன. அதே சமயத்தில், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் கூட பங்கு பெறவில்லை.

சர்வதேச அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பெறும் வகையில், துப்பாக்கி சுடும் பயிற்சியை பெறுவதற்கான கூடுதல் வசதிகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக 28.8.2014 அன்று எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், வீட்டுவசதித் துறை அமைச்சர் இரா. வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர்மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே. சண்முகம், உள் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, இளைஞர் நலன்

மற்றும் விளையாட்டுத் துறை செயலாளர் முகமது நசீமுத்தீன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் வி.கே. ஜெயக்கொடி, காவல் துறை தலைமை இயக்குநர்

கே. ராமானுஜம், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, துப்பாக்கிச் சுடும் பயிற்சியினை இளைஞர்கள் பெறும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பில் கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.

1. தற்போது வீராபுரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் மின்னணு வசதியுடன் கூடிய தடங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஊனமாஞ்சேரியில் அமைந்து உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில்

18 கோடி ரூபாய் செலவில் 10 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள், 25 மீட்டர் சுடுதளத்தில் 60 தடங்கள், 50 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள் என மொத்தம்

240 தடங்கள் அமைத்தல், இறுதிப் போட்டிக்காக, 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும்

50 மீட்டர் சுடுதளங்கள் ஒவ்வொன்றிலும் 10 தடங்கள் அமைத்தல் மற்றும் சுடுதளத்திற்கான கட்டடங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், 16 கோடி ரூபாய் செலவில் மின்னணு வசதிகளுடன் கூடிய ஸ்கோர் போர்டு உட்பட உலகத்தரம் வாய்ந்த நவீன துப்பாக்கி சுடுதலுக்குரிய உபகரணங்கள் வாங்கப்படும். இது தவிர, 2 கோடி ரூபாய் செலவில் டிராப் அன்ட் ஸ்கீட் தளத்திற்கான உபகரணங்கள் வாங்கப்படும்.

2. கோயம்புத்தூர் மற்றும் மதுரை பகுதிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த இரு இடங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகங்களில், தலா 2 கோடி ரூபாய் வீதம் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு வளாகத்திலும் மின்னணு வசதிகளுடன் கூடிய 15 தடங்கள் கொண்ட துப்பாக்கி சுடும் தளங்கள் அமைக்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் பெருவாரியான துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கவும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தவும் வழிவகுக்கும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago