முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்முடைய பகைவர் எங்கோ மறைந்தார்: முதல்வர் பேச்சு

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.30 – இன்று அரசியல் களத்தில் எதிரிகளையே காணவில்லை. நம்முடைய பகைவர் எங்கோ மறைந்தார் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அதிமுக பொதுச் செயலாளராக 7வது முறையாக போட்டியின்றி முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் பேசியதாவது,

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் நிறுவப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இன்று மீண்டும் என்னை நீங்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

என் மீது எல்லையில்லா நம்பிக்கை வைத்து, என் மீது அளவு கடந்த அன்பு கொண்டு நீங்கள் அனைவரும் ஒருமனதாக என்னை கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கழகப் பொதுச் செயலாளர் என்னும் பொறுப்பை மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொண்டு எனக்காக இங்கே தலைமைக் கழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கால் நூற்றாண்டுக்கும் மேலாக கடந்த 26 ஆண்டு காலமாக நான் கழகப் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறேன். இந்த 26 ஆண்டு காலத்தில் கழகம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. 1987-ஆம் ஆண்டில் இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நம்மை விட்டுச் சென்ற போது கழகத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 17 லட்சமாக இருந்தது. ஆனால், இன்று 2014-ல் 1 கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் கழகத்தில் இருக்கிறார்கள்.

2011ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை அடைந்தோம். அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் அனைத்து மாநகராட்சிகளிலும் நாம் வெற்றி பெற்று, பெரும்பாலான நகராட்சிகளிலும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் மகத்தான வரலாற்றுச் சாதனையை படைத்தோம்.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் இனி யாரும் முறியடிக்க முடியாத ஒரு வரலாற்றுச் சாதனையை நாம் படைத்திருக்கிறோம். இன்று அரசியல் களத்தில் எதிரிகளையே காணவில்லை. நம்முடைய பகைவர் எங்கோ மறைந்தார். காணுகின்ற இடங்களில் எல்லாம் மக்கள்தான் நமக்குத் தெரிகிறார்கள். தமிழக மக்களுக்கும் இன்று தெரிகின்ற, அவர்கள் அடையாளம் கண்டு கொள்கின்ற ஒரே அரசியல் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரே கொள்கை, மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருக்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரே லட்சியம், மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு. ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே. வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே என்பதை மனதில் வைத்து நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தொடர்ந்து மக்கள் பணி ஆற்றினோம் என்றால் இனி நம்மை வீழ்த்த எந்த சக்தியும் இல்லை.

`வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உங்களைச் சேரும்' என்று சொல்லி, மீண்டும் ஒரு முறை கழகத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக என்னை கழகப் பொதுச் செயலாளராக தேர்வு செய்தமைக்கு எனது உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்