முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக.30 - விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் மெகா சைஸ் கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. குறிப்பாக விநாயகர் கோவில்களில் அருகம்புல், எருக்கம்பூ மாலைகள் போட்டும் கொழுக்கட்டை செய்து படையல் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிற்பபு வழிபாடு செய்தனர். தென் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆகஸ்டு 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு சுவாமி சிங்க, பூத, கமல, இடப, யானை, மயில், குதிரை உள்ளிட்ட வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

6-ஆம் நாளன்று யானை முகம் கொண்ட அசுரனை வதம் செய்யும் கஜமுக சமஹாரம் நடந்தது. 9-ஆம் நாளன்று தேரோட்டம் நடந்தது. விழா நிறைவு நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டது. கோவில் முன் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 9.50 மணிக்கு கோவில் முன்பு உற்சவர் தங்ககவச அலங்காரத்திலும் சண்டிலேஸ்வரர் கோடகத்திலும் எழுந்தருளினர். பின்னர் குளப்படிக்கட்டில் அங்குசதேவர் எழுந்தருளினார். அப்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முடங்க அவருக்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து தீர்த்தவாரியும் பகல் 12 மணிக்கு மூலவருக்கு கொழுக்கட்டை படைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவை முன்னிட்டு காரைக்குடி டிஎஸ்பி முருகேஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ. கள் உள்பட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோவிலின் கிழக்கு கோபுர வாசல் மற்றும் விஐபி தரிசனம் செல்லும் வழியில் பலத்த சோதனை நடத்தப்பட்ட பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதே போன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தனர். மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து அருகம்புல், எருக்கம் பூ மாலை அணிவித்து வாழை கன்று வைத்து அலங்கரித்தனர். பின்னர் விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, வாழை, கொய்யா, பேரிக்காய், மாதுளை, விளாங்காய் உள்பட பழ வகைகள், பொரி, கடலை, சுண்டல் ஆகியவற்றை படைத்து வழிபாடு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்