முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடுங்கையூர் அருகே விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலி

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.31 - சென்னை கொடுங்கையூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலியானார்கள். மணலி சேலவாயல் சின்னாண்டி மடம் அருகில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு வரும் கழிவு நீர் ராட்சத தொட்டிகளில் சுத்திகரிக்கப்பட்டு மீத்தேன் வாயு சேகரிக்கப்படுகிறது. அந்த மீத்தேன் வாயுவில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. இங்கு 50 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார்கள். ஷிப்டு முறையில் வேலை பார்த்து வரும் இவர்களில் 12 பேர் நேற்று இரவு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். ஒரு கழிவு நீர் தொட்டிக்குள் இருந்த வால்வில் அடைப்பு ஏற்பட்டது. அதை சரி செய்யவதற்காக நந்தகுமார் (21), ஜெயக்குமார் (28) இருவரும் தொட்டிக்குள் இறங்கினார்கள்.

சிறிது நேரத்தில் விஷவாயு தாக்கியதில் இருவரும் திணறினார்கள். அதை கவனித்ததும் ராஜி (22), சத்யராஜ் (27) இருவரும் அவர்களை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கினார்கள். சிறிது நேரத்தில் அவர்களும் மூச்சு திணறி தத்தளித்தார்கள். அதை பார்த்ததும் மற்ற தொழிலாளர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் நந்தகுமாரும், ஜெயக்குமாரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். ராஜி, சத்யராஜ் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலியானவர்களில் நந்தகுமார் வியாசர்பாடி சுப்பிரமணிய நகரை சேர்ந்தவர். ஐ.டி.ஐ படித்தவர். ஜெயக்குமார் கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர். இவருக்கு திருமணம் ஆகி நதியா என்ற மனைவியும், லாவண்யா (4), அனுசுயா (1) ஆகிய இரு மகள்களும் உள்ளனர். விபத்தில் தொழிலாளர்கள் இறந்த தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் திரண்டு வந்தனர். பலியானவர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதார்கள்.

இது குறித்து மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கூறும் போது, தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் தான் அநியாயமாக 2 பேர் இறந்துள்ளனர். பணிபுரியும் மற்ற தொழிலாளர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்