முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் பிரதமர் மோடி புத்தர் கோவிலில் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

கியோட்டோ, செப்.01 - ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புத்தர் கோவிலில் தரிசனம் செய்தார்.

பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் சென்றார். ஒசாகா அருகேயுள்ள கன்காய் சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து கியோட்டோ அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவரை ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே வரவேற்றார். அங்கு நடந்த சந்திப்பின் போது வாரணாசியை கியோட்டோ போன்று நவீன நகரம் ஆக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையில் ஜப்பானில் நேற்று 2வது நாள் சுற்றுப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார். கியோட்டோவில் உள்ள மிகப் பழமை வாய்ந்த தோஜி என்ற புத்தர் கோவிலுக்கு சென்றார்.

இது ஜப்பானில் உள்ள புத்தர் கோவில்களில் மிகவும் உயரமானது. 57 மீட்டர் உயரம் கொண்டது. 8 வது நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையானது. மரத்தினால் கட்டப்பட்ட 5 அடுக்கு மாடிகளாக ஆனது. இந்த கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு நீண்ட நேரம் சுற்றி பார்த்தார். அவரை கோவில் தலைமை புத்தபிட்சு மோரி அழைத்து சென்று கோவிலின் பாரம்பரியம் மற்றும் வரலாறு குறித்து விளக்கினார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயும் சென்று இருந்தார். மோடியுடன் சென்ற மற்றொரு பிட்சு ஹசி கூறும் போது பிரதமர் மோடி இக்கோவிலுக்கு வந்ததில் மிக மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு மிக பெரியமனது. இங்கு வந்ததை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்றார்.

இதற்கிடையே தோஜி புத்தர் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடியை ஏராளமான இந்தியர்கள் கைகளில் இந்திய தேசிய கொடியை அசைத்து வரவேற்றனர். அவர்களை நேரில் சந்தித்த மோடி கைகுலுக்கி வாழ்த்தினார். தோஜி புத்தர் கோவிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. தோஜி புத்தர் கோவிலை தொடர்ந்து கியோட்டோவில் கின்காகுஜியில் உள்ள தங்க சிலை புத்தர் கோவிலுக்கும் மோடி சென்றார். இது கடந்த 1955ம் ஆண்டில் கட்டப்பட்டது.

அங்கு பிரார்த்தனை செய்த அவர் அங்குள்ள குளம் மற்றும் தோட்டத்தை சுற்றிப்பார்த்தார். மேலும் கோவில் வரலாறு குறித்து கேட்டறிந்தார். கோவிலை சுற்றிப் பார்த்த போது அங்கு வெளிநாட்டு பயணிகள் பெருமளவில் வந்திருந்தனர். அவர்கள் மோடியுடன் போட்டோ எடுத்து கொண்டார். கோவிலுக்கு வந்திருந்த ஜப்பான் பெண்கள் ஆர்வமுடன் அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர். அதன் பின்னர் கியோட்டோவில் உள்ள ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையத்துக்கு பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். இந்தியாவில் அரிவாள் உரு ரத்த அணு என்ற கொடிய நோயினால் மலை வாழ் மக்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரத்தத்தில் சிவப்பணுக்கள் வட்ட வடிவில் இருக்கும். அதன் மத்தியில் துவாரம் இன்றி இருக்கும். ஆனால் இந்த நோய் பாதித்தவர்களுக்கு சிவப்பணுக்கள் பிறை சந்திரன் வடிவில் இருக்கும். வட்டவடிவ செல்களால் ரத்த நாளங்களில் தாராளமாக சென்று வரமுடியும். ஆனால் நோய் பாதித்த சிவப்பணு செல்களால் சென்று வரமுடியாது. இதனால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

எனவே சிக்கிள் செல் அனீனியா என்றழைக்கப்படும் அரிவாள் உருரத்த அணு நோயை குணப்படுத்தும் ஆராய்ச்சி குறித்து அங்குள்ள நிபுணர்களுடன் மோடி விவாதித்தார். அப்போது இந்த நோயை குணப்படுத்த இந்தியாவுடன் இணைந்து ஒத்துழைக்க தயார் என ஜப்பான் நிபுணர்கள் தெரிவித்தனர். அவர் குஜராத் முதல் மந்திரி ஆக இருந்த போது கியோட்டோ பல்கலைக்கழகம் வந்துள்ளார். அப்போதும் இது குறித்து அவர் விவாதித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்