முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழும் கைவினை பொக்கிஷ விருது: முதல்வர் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.1 – முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், 14 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும், 10 கைவினைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷங்கள் விருதுகளையும் வழங்கும் அடையாளமாக 7 கைவினைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பூம்புகார் விருது, 2002-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் ‘மாநில விருது’ என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நுட்பமான ஆய்வுக்குப் பின் தெரிவு செய்யப்பட்ட பத்து சிறந்த கைவினை கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொன்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 4 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், தாமிரப்பத்திரம் மற்றும் சான்றிதழ் கொண்டதாகும்.

2013-–2014ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 14 கைவினைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் அடையாளமாக ஒரு கைவினைஞருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா 28.8.2014 அன்று விருதினை வழங்கி கவுரவித்தார்.

ஜப்பான் நாட்டின் வாழும் தேசிய பொக்கிஷங்கள்" Living National Treasures of Japan எனும் விருதை ஏழு விதமான கலைப் பொருட்கள் தயாரிக்கும் கைவினைஞர்களுக்கு ஜப்பான் அரசு வழங்கி வருவது போல், தமிழ்நாட்டிலும் கைத்திறன் தொழிலில் சிறந்து விளங்கி அதற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம்" என்ற உயரிய விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா 8.5.2013 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் முதன் முதலாக…

கைவினைஞர்களைப் பொக்கிஷமாக கருதி அறிவிக்கப்பட்டுள்ள இத்தகைய விருது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சலோக சிற்பங்கள், பித்தளை விளக்குகள் மற்றும் பித்தளை கலைப் பொருட்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், மர சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுடுகளிமண், கலம்காரி, பத்திக், அப்ளிக் துணி ஓவியங்கள், காகிதக் கூழ் பொம்மைகள், பாய் நெசவு, மூங்கில் மற்றும் பனை ஓலை பொருட்கள், நெட்டி வேலை, நார் பொருட்கள், கோவில் நகைகள், சித்திரத் தையல் வேலை, இதர கைவினைப் பொருட்கள் ஆகிய 16 விதமான கைத்திறன் தொழில்களில் இருந்தும் கைதேர்ந்த 65 வயதுக்கும் மேற்பட்ட 10 கைவினைஞர்களை தேர்வுக் குழு மூலம் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெறும் கைவினைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தாமிரப் பத்திரம், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.

2013-–2014ம் ஆண்டிற்கான வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதினை 10 கைவினைஞர்களுக்கு வழங்கும் அடையாளமாக 6 கைவினைஞர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா 28.8.2014 அன்று வழங்கி கவுரவித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கைவினைஞர்களுக்கு 2010-–2011ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 10 விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், கைவினைஞர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் 2011-–2012ம் ஆண்டு முதல் 85 பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருதுகள், 2013–-2014ம் ஆண்டு முதல் 132 அடுத்த தலைமுறை கைவினைஞர் போட்டி விருதுகள் ஆகியவை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இத்துடன் முதலமைச்சரால் 28.8.2014 அன்று வழங்கப்பட்ட 10 வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும் சேர்த்து மொத்தம் 237 விருதுகள் கைவினைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகின்றன.

சிறு தொழிலில்

சிறந்த மாநில விருது

The India SME Forum என்ற அரசு சாராத அமைப்பு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தம்மிடையே சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், அவைகளின் இடர்பாடுகளை களைந்து, வெற்றிகளை பெறவும் உருவான நாட்டின் ஒரு பெரிய அமைப்பாகும். இந்த அமைப்பானது 2012-–2013ம் ஆண்டிற்கான இந்திய அளவில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான சிறந்த மாநிலம் எனும் விருதை தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது. இந்த விருதினை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப. மோகன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) சி.வி. சங்கர், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், கூடுதல் தலைமைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்