முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த 14 பேரின் குடும்பத்துக்கு நிதி: முதல்வர் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.1 - விஷவாயு தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், மின்னல், இடி தாக்கியும் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், தகடி கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரின் மகன்கள் சிறுவன் சிவகண்டன், சிறுவன் பூமிநாதன் ஆகிய இருவரும் 23.2.2014 அன்று வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், வெள்ளப்பள்ளம் ஊராட்சியைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மனைவி கருப்பாச்சி 25.2.2014 அன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்;

சென்னை, பாடியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் முருகன், ராமசந்திரன் என்பவரின் மகன் பாஸ்கரன் ஆகிய இருவரும் 2.3.2014 அன்று திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டம், கஞ்சனாகுப்பம் பகுதி அருகே கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டம், மாதவரம் செங்குன்றம் நெடுஞ்சாலை அருகில் 8.3.2014 அன்று பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிமெண்ட் ஸ்லாப் இடையே சிக்கி சென்னை, பெரியார் நகர் ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் முருகேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சென்னை, கொய்யாத்தோப்பு, குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்பில் வசித்து வந்த சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் சீனிவாசன் என்பவர் 3.4.2014 அன்று துப்புரவு பணியில் இருந்தபோது மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி பகுதிI கிராமம், அன்னை தெரசா மீனவர் காலனியில் 4.4.2014 அன்று கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கியதில் மாரியப்பன் என்பவரின் மகன் கலையரசன், சுப்பையா என்பவரின் மகன் மாரியப்பன் மற்றும் அமலதாசன் என்பவரின் மகன் பீட்டர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், தெற்கு குருவிகுளம் கிராமம் அருகே 5.4.2014 அன்று மின்னல் தாக்கியதில் வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கடற்கரை என்பவரின் மகன் கருப்பையா, வடக்கு குருவிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னகுருசாமி என்பவரின் மகன் நம்பிராஜன் மற்றும் செங்கோட்டை வட்டம், நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் சங்கர் கணேஷ் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திருநெல்வேலி மாவட்டம், பல்லிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நயினார் என்பவரின் மனைவி பாப்பாத்தி 23.4.2014 அன்று இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்