முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியை கலாச்சார நகரமாக்க ஜப்பானுடன் ஒப்பந்தம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

டோக்கியோ,செப்.1 -

 

ஜப்பான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்துப் பேசினார்.அப்போது இந்திய நகரங்களை ‘ஸ்மார்ட்’ நகரங்களாக மாற்றுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் முதல்கட்டமாக வாரணாசியை கலாச்சார நகரமாக மாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி ஜப்பானுக்கு கடந்த சனிக்கிழமை சென்றார். கன்சாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவருக்கு அந்த நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வெளிநாட்டுத் தலைவர்களை டோக்கியோவில் சந்திப்பதுதான் வழக்கம். பிரதமர் மோடிக்காக அவர் டோக்கியோவில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள கியோட்டோவுக்கு வந்தார்.

அங்கு நகர மேயரின் வீட்டில் மோடியும் ஷின்சோ அபேவும் சந்தித்துப் பேசினர். மரபுகளை மீறி இந்தியப் பிரதமர் மோடியை ஷின்சோ அபே சந்தித்துப் பேசியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கியோட்டோவைப் போன்று உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியையும் கலாச்சார அம்சங்கள் மாறாமல் ஸ்மார்ட் நகரமாக மாற்ற இரு நாடுகளி டையே ஒப்பந்தம் கையெழுத் தானது. இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கியோட்டோ மேயர் டைசாகு கடோகாவாவும் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் தீபா வாத்வாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் பின்னர் மோடிக்கு ஷின்சோ அபே சிறப்பு விருந்து அளித்தார்.

அப்போது சுவாமி விவேகானந்தரின் புத்தகங்கள், பகவத்கீதை ஆகியவற்றை ஷின்சோ அபேவுக்கு மோடி பரிசாக வழங்கினார்.

கியோட்டோ நகரில் ஞாயிற்றுக் கிழமையும் தங்கியிருக்கும் மோடி அங்குள்ள பல்வேறு புராதன இடங்கள், கோயில்களைப் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து தலைநகர் டோக்கியோவுக்கு செல்கிறார். அங்கு இன்று மோடியும் ஷின்சோ அபேவும் அதிகாரபூர்வமாக சந்தித்துப் பேச உள்ளனர்.

கிழக்கு சீனக் கடலில் அமைந்துள்ள சென்காகு தீவுகள் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த தீவுப் பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என்று சீனா உரிமை கொண்டாடுகிறது.

இந்தியாவின் சில பகுதிகளையும் சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் ஜப்பானும் இந்தியாவும் மிகவும் நெருக்கமாகி உள்ளன. இரு நாடுகளும் இணைந்து தனியாக போர் பயிற்சியை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கனிம வளங்களுக்கு சீனாவையே ஜப்பான் பெரிதும் நம்பியுள்ளது. அதை மாற்றி இந்தியாவில் இருந்து பெருவாரியான கனிமங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

ஜப்பானிய சட்டப்படி வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்கக்கூடாது. சமீபத்தில் இந்தச் சட்டம் தளர்த்தப்பட்டது. ஜப்பானின் அதிநவீன மீட்பு விமானமான யு.எஸ்.2- விமானங்களை இந்தியாவுக்கு விநியோகிக்க அந்த நாடு முன்வந்துள்ளது.

புல்லட் ரயில் சேவையில் முன்னோடியாக விளங்கும் ஜப்பான், தனது ஷின்கான்சென் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் புறப்படுவதற்கு முன்பாகவே ட்விட்டர் சமூக வலை தளம் மூலம் மோடியும் ஷின்சோ அபேவும் பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திரமோடி ஒரு படி முன்னேறி ஜப்பானிய மொழியிலேயே ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார். இது ஜப்பானியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்