முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் நாள் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.1-ஆசிரியர் நாள் என்ற பெயரை குருஉத்சவ் என பெயர் மாற்றம் மத்திய அரசு மாற்றியிருப்பது சரியல்ல என்றும் மத்திய அரசு கைவிட வேண்டும்: என்றும் ராமதாஸ்;வைகோ ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

ராமதாஸ் கோரிக்கை

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆசிரியராக பணியை தொடங்கி இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5–ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் ஆசிரியர் நாளையொட்டி வரும் 5–ந் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுடன் காணொலிக் கலந்தாய்வு முறையில் பிரதமர் மோடி கலைந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பிரதமர் ஒருவர் பள்ளி மாணவ–மாணவியருடன் கலந்துரையாடுவது இதுவே முதல் முறையாகும். இந்த வகையில் மத்திய அரசின் முயற்சி வரவேற்கத்தக்கதாகும். அதே நேரத்தில் ஆசிரியர் நாள் என்ற பெயரை குருஉத்சவ் என மத்திய அரசு மாற்றியிருப்பது சரியல்ல.

சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே ஆசிரியர் நாளை குருஉத்சவ் என்று பெயர் மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ :

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, தனது கடும் உழைப்பாலும், முயற்சியாலும் கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆவார்.

அவர் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று அப்பதவிக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 5 ஆம் நாள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

எதிர்கால இளம் தலைமுறையை பிஞ்சு பருவத்திலிருந்தே ஆற்றுப்படுத்தி, சமூகத்தில் உயர்ந்தவர்களாக ஏற்றம் பெற கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் திருநாளாக ஆசிரியர் தினம் 1962–ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 5–ம் நாள் ஆசிரியர் தினம் அன்று பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்களிடம் இணையம் மூலம் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால், இந்நிகழ்ச்சியை வடிவமைத்துள்ள மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், ஆசிரியர் தினத்தின் பெயரை "குருஉத்சவ்" என்று பெயர் மாற்றிக் கொண்டாட அறிவிப்பு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.

பல்வேறு தேசிய இனங்களின் மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களைப் பேணி வளர்த்தால்தான் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெறும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

எனவே, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆசிரியர் தினத்தை "குருஉத்சவ்" என்று பெயர்மாற்றம் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்