முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா தலைநகர்: சந்திரபாபு நாயுடு 9-ஆம் தேதி முடிவு

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, செப்.02 - ஆந்திரா தலைநகர் தேர்வு செய்வது குறித்து வருகிற 9-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு முடிவு செய்வார் என தெரிகிறது.

ஆந்திராவை 2-ஆக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. ஐதராபாத் தெலுங்கானாவுடன் சேர்க்கப்பட்டதால் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை தேர்வு செய்ய முன்னாள் மத்திய நகர்புற அபிவிருத்தி துறை செயலளர் கே.எம். சிவராமகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினர் அனைத்து மாவட்டங்களையும் பார்வையிட்டனர். பின்னர் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில் ஆந்திர தலைநகரை ஒரே இடத்தில் அமைக்கக் கூடாது என்றும் மூன்று இடங்களில் அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. ஆந்திராவில் வட பகுதியான விசாகப்பட்டினத்திலும், ராயலசீமாவின் ஒரு பகுதியிலும், காளஹஸ்தி நாடி குடி பகுதியிலும், தலைநகர் அமைக்கலாம் என்று கூறியிருந்தது. இவ்வாறு தலைநகர் அமையும் பட்சத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் மாநிலம் சீரான வளர்ச்சியை பெரும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விஜயவாடா - குண்டூர் இடையே புதிய தலைநகர் அமையும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறி வரும் சூழ்நிலையில் அதனை மத்திய குழு நிராகரித்துவிட்டது. விஜயவாடா - குண்டூர் இடையே தலைநகர் அமைந்தால் அது உள்கட்டமைப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் விவசாய உற்பத்தி பாதிக்கும் என்றும் மத்திய குழு கூறியுள்ளது. ஆனாலும், விஜயவாடா - குண்டூர் இடையே தலைநகர் அமைப்பதில் சந்திரபாபு நாயுடு தீவிரமாக உள்ளார்.

இதுகுறித்து முடிவு செய்ய வருகிற 9-ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தை அவர் கூட்டியுள்ளார். அதில் புதிய தலைநகர் பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கு இடையே விஜயவாடாவில் தலைநகர் அமைக்க ராயலசீமா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராயலசீமா பகுதியைச் சேர்ந்த மத்திய மந்திரிகளும் எதிர்க்கிறார்கள். மத்திய குழு பரிந்துரை செய்த படி தலைநகர் அமையாவிட்டால் ஆந்திரா மீண்டும் ஒரு மாநில பிரிவினை போராட்டத்துக்கு வழி வகுத்துவிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்