முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சிலை ஊர்வலம்: பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 3 – விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு டி.ஜி.பி. கே.ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 29-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்து அமைப்புகள், சமூக இயக்கங்கள், இளைஞர் மன்றங்கள் ஆகியவை சார்பில் மாநிலம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் கடந்த சனிக்கிழமை முதல் கடல், ஆறு, குளங்கள் என நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 408 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. சிலை கரைப்பு நிகழ்ச்சியையொட்டி சென்னையில் சுமார் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேபோல மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இருப்பினும் திருநெல்வேலி, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் ஊர்வலத்தில் பிரச்னை ஏற்பட்டதால், போலீஸார் தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் விளைவாக தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு இயக்குநர் டி.ஜி.பி. கே.ராமானுஜம், கரைக்கப்படாமல் இருக்கும் விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அதேவேளையில் இம் மாதம் 6,7-ஆம் தேதிகளில் இந்து அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் விநாயகர் சிலை ஊர்வலத்தை தீவிரமாக கண்காணிக்கும்படியும், ஊர்வலம் செல்லும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக மாநிலம் முழுவதும் விநாயகர் சிலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்