முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்காகவே ஆட்சி நடத்துபவர் முதல்வர்: அமைச்சர் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.3 - சென்னை மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய உறுப்பினர்களுக்கு அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணிக்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் வாரந்தோறும் தொடர் முகாம்கள் நடத்தப்பட்டு உறுப்பினர் சேர்க்கைக்கான புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்றன. இம்முகாம்களில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு தற்போது மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை, அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ்ப்பாக்கம், மாநகராட்சி பகுதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா கலந்து கொண்டு, 2000 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை வழங்கினார். அப்போது அமைச்சர் பேசியதாவது:-

முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஏழை. எளிய நடுத்தர மக்களுக்காக பல்வேறு வகையான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டங்களில் ஒன்றாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் திகழ்கிறது. முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சேவை கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே இத்திட்டத்தினை 2012 ஆம் ஆண்டில் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களும் பயனடையலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலும், குறிப்பிட்ட 77 வகையான நோய்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளிலும் மருத்துவ சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்ற போது காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கிறது. அந்நிதியானது அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதாவது கூடுதல் கட்டடங்கள், கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் புதிய மருத்துவ உபகரணங்கள் வாங்கிட பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளும் மேம்பாடு அடைகின்றன.

இன்றைய தினம் 103 வார்டினை சேர்ந்த 2000 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டையினை பாதுகாப்பாக வைத்திருந்து, உடல் நலனைபாதுகாத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வியந்து பாராட்டும் அம்மா உணவகம், மக்களைத் தேடி சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை வழங்கும் அம்மா திட்டம், விலையில்லா அரிசி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பேன் வழங்கும் திட்டம், விலையில்லா மடிக்கணினிகள், சிற்றுந்துகள், ரூ.10க்கு அம்மா குடிநீர் என மக்களுக்காகவே திட்டங்களை தீட்டி, செம்மையான ஆட்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் நடத்தி வருகின்றார்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் ஏ.இ. வெங்கடேசன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் வாசுகி பவானி சங்கர், வட்டாட்சியர் செல்வம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்