முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க உரிமங்களை மறு ஏலம் விடத் தயார்: அரசு

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, செப்.03 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உரிமங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுமானால் அவற்றை மறு ஏலம் விடத் தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ. 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கடந்த 2012-ம் ஆண்டு அறிக்கை அளித்தார்.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. முதலில் மன்மோகன் சிங் ஆட்சிக் கால ஒதுக்கீடுகளை மட்டும் விசாரிப்பதாக இருந்தது. பின்னர் 1993 ஜூலை முதல் 2010-ம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளையும் விசாரிக்கும் வகையில் விசாரணை வரம்பை உச்ச நீதிமன்றம் விரிவுபடுத்தியது. இதன்மூலம் முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரின் ஆட்சிக் காலத்நிதில் நடந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டன.

இந்த வழக்கில் கடந்த 25-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவில் 1993-ல் இருந்து 2010-ம் ஆண்டு வரை முந்தைய பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று கூறியது. மேலும் இத்தீர்ப்பினால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி முடிவு செய்யவேண்டி உள்ளதால் அதற்கான விசாரணை தொடங்கும் என்றும் கூறியது.

இந்நிலையில் இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, "சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்பட்ட 218 ஒதுக்கீடுகளில் 40 ஒதுக்கீடுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த 40 ஒதுக்கீடுகளை பெற்றுள்ள நிறுவனங்களில் பல, நிலக்கரி உற்பத்தியை தொடங்கிவிட்டன. எஞ்சியவை உற்பத்தியை தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உரிமங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுமானால் அவற்றை மறு ஏலம் விட மத்திய அரசு தயாராக உள்ளது" என்றார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுமானால் தாங்கள் வங்கிக் கடனாக பெற்றுள்ள ரூ.5 லட்சம் கோடியை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று ஒதுக்கீடு பெற்றுள்ள நிறுவனங்கள் கூறிவரும் நிலையில், இதற்கு எதிராக மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்