முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல் கேபிள் விவகாரம்: மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

சென்னை, செப். 6 - கலாநிதிமாறன் கேபிள் நிறுவன உரிமம் தொடர்பாக ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மத்திய அரசிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சன் குழுமத்தின் கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விட்டல் சம்பத்குமரன் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கல் கேபிள் நிறுவனம் தொலைக்காட்சி சேனல்களை டிஜிட்டல் முறையில் சென்னை, கோவை உள்பட பல பகுதிகளில் எம்எஸ்ஓ மூலம் ஒளிபரப்பி வருகிறது. இதற்காக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை உரிமம் வழங்கியுள்ளது.

இந்த உரிமத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்பு ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

அது தொடர்பாக எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்கவில்லை. அதனால், சென்னை, கோவை ஆகிய நகரங்களின் எம்எஸ்ஓ உரிமத்தை ரத்து செய்து கடந்த 20-ஆம் தேதி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை உத்தரவிட்டது.

இது தொடர்பாக எங்களது வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், 15 நாள்களுக்குப் பிறகு எங்களது கேபிள் நிறுவனம் ஒளிபரப்பாகாது, வேறு கேபிள் நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளுங்கள் என்று ஒளிபரப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, எந்த முன்னறிவிப்பும் வழங்காமல் உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், ஒளிபரப்பு உரிமம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் முன்பு நடந்தது. விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜரானார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கோப்புகளைப் பார்க்கும் போது கல் கேபிள் நிறுவன இயக்குநர்களுக்கோ, நிர்வாகிகளுக்கு எதிராகவோ எந்த எதிர்மறை குறிப்புகளும் இல்லை.

கோப்புகளின் தகவல்களில் மனுதாரர்கள் நடத்தும் தொலைக்காட்சி சேனல்களுக்கு எதிராக எந்த பரிசீலனையும் இல்லாத போது, அவர்கள் நடத்தும் எம்எஸ்ஓக்களுக்கு மட்டும் பாதுகாப்பு ஒப்புதல் பெற வேண்டும் என எவ்வாறு கூற முடியும்.

கேபிள் ஆபரேட்டர் பதிவை ரத்து செய்தல், நீக்கம் செய்தலின் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

மேலும், பொதுவான நிபந்தனைகள், பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் நிபந்தனைகள் விதிப்பதற்கு எந்தொவரு வித்தியாசமும் இல்லாத போது சந்தர்ப்பம் அளிக்காமல் இருக்க முடியாது. எனவே, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

அதை நேரம் மத்திய அரசிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு இந்த உத்தரவு எந்த விதத்திலும் தடையாக இருக்காது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்