முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தை பயன்படுத்தி ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சி

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப் 1 5: காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்து பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். சுமார் 10 லட்சம் பேர் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒருங்கிணைந்து மீட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் பேர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வெள்ள பாதி்ப்பு பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. உணவு, உடை, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும், தகவல் தொடர்பு இணைப்பு சேவைகளும் மக்கள் நலன் கருதி இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. என்றாலும் நிவாரண பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்ற அதிருப்தி காஷ்மீர் மாநில மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் நேற்று முன்தினம் பல இடங்களில் பொதுமக்கள் மீட்பு குழுவினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். சில இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். அந்த இடங்களுக்கு நிவாரண பொருட்களுடன் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று மக்களை சமரசம் செய்தனர். இந்த நிலையில் காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து விட்டது. ஆநால் நதிகளில் வெள்ளப் பெருக்கு குறையவில்லை. இதன் காரணமாக நீர்வழி பகுதிகளில் இன்னமும் மக்கள் மழை தண்ணீரில் தத்தளித்தபடி உள்ளனர்.

காஷ்மீரில் கடந்த 10 நாட்களாக பல இடங்கள் தண்ணீரில் மிதப்பதால் இந்த சூழ்நிலையை பாகிஸ்தான் தீவிரவாதகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானில் செயல்படும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்திடம் மட்டுமே வலிமையான கடற்படை உள்ளது. அந்த படையில் உள்ள தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நதிகளிலும் கடலிலும் பல்வேறு பயிற்சிகள் பெற்றுள்ளனர். கடந்த 2013ம் ாண்டு மும்பையில் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தியது இந்த கடற்படையை சேர்ந்த தீவிரவாதிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் ஓடும் நதியை கடந்து வர இந்த தீவிரவாதிகள் ஏற்கனவே பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

தற்போது எல்லையில் உள்ள நதியில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் அங்கு நின்ற இந்திய வீரர்கள் பின்வாங்கி வந்துள்ளனர். மேலும் தற்போது வந்த ராணுவ வீரர்களில் பலர் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை ஊடுருவ ஏற்ற சூழலாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் கருதுகிறார்கள். எனவே லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் கடற்படை தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்கும்  முயற்சிகளில் ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீது ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் இந்திய எல்லை  அருகே முகாமிட்டுள்ளார். அவர் தலைமையில் சுமார் 60 தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர். அவர்களிடம் சாடிலைட் போன், நீருக்கு அடியில் புகுந்து நீந்தும் கருவிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹபீஸ் சயீது உத்தரவிட்டதும் அந்த தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவுவார்கள் என்று தெரிகிறது. தீவிரவாதிகளின் இந்த திட்டத்தை ராணுவ உளவுத்துறை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஹபீஸ் சயீது கூறியுள்ள போதிலும் தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்யும் திட்டத்துடன் தான் அவர் அங்கு முகாமிட்டுள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது. காஷ்மீரில் உள்ள ராணுவ நிலைகளை தாக்கி மிக கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் இந்த ஊடுருவலுக்கு திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

 லஷ்கர்  தீவிரவாதிகள் கையில் சாட்டிலைட் போன், பதப்படுத்தப்பட்டுள்ள உணவு கொடுக்கப்பட்டுள்ளதால் மும்பை பாணியிலான தாக்குதல் போல தாக்குதலுக்கு அவர்கள் தயாராகி வருவதாக  உளவுத்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து எல்லை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லை காவல் வீரர்களை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், வெள்ள நிவாரண பணிகளை செய்யவும் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களும் டெல்லி போலீசாரும் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்