முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.15 - மீனவர்கள் பிரச்சினையில் இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸியை ஆதரித்து மாநகராட்சிக்கு உட்பட்ட `அண்ணாநகர்' என்ற இடத்தில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை அமோக வெற்றி பெறச் செய்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தல் 18.9.2014 அன்று நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பதற்காக நான் இங்கே வந்து இருக்கிறேன்.

எனது ஆட்சியின் மூன்று ஆண்டு கால சாதனைகளை எடை போட்டு அதன் மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை டெல்லிக்கு வெற்றி நடை போட வைத்தீர்கள். மற்றக் கட்சிகளுக்கு அரசியலில் இருந்து நிரந்தர விடை கொடுத்துவிட்டீர்கள். இதன் எதிரொலியாக அனைத்துக் கட்சிகளும் இடைத் தேர்தலுக்கு விடை கொடுத்துவிட்டன.

சுயேட்சைகளும், எந்தத் தேர்தல் என்றாலும் அதில் பங்கு பெற வேண்டும் என்ற கொள்கை உடைய தேசிய கட்சியும் தான் தேர்தல் களத்தில் இருக்கின்றன. உள்ளபடியே சரியான போட்டியாளர் என்று பார்த்தால், உங்கள் நலன்களைக் காக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே களத்தில் இருக்கிறது.

மாநகராட்சி தேர்தலில், தேசிய கட்சிக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு தலைமை. டெல்லியில் ஒரு தலைமை. தமிழ்நாட்டில் ஒரு நிலைப்பாடு. டெல்லியில் ஒரு நிலைப்பாடு.

மீனவர்கள் நிறைந்த பகுதி தூத்துக்குடி. எனவே உதாரணத்திற்கு மீனவர் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்துவதும்; சிறை பிடிப்பதும்; அவர்களது படகுகளை பிடித்து வைத்துக் கொள்வதும் வாடிக்கையாக நடந்து கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று நான் பாரதப் பிரதமர் அவர்களை நேரிலும் கடிதங்கள் வாயிலாகவும் வற்புறுத்தி வருகிறேன். இதன் காரணமாக மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

இந்தப் பிரச்சனையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன? தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஒருவர் தமிழக மீனவர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார். தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பிக் கொடுக்க தான் தான் தடை போட்டதாக மார்தட்டிக் கொள்கிறார். இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி அவருக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மத்திய அரசோ மவுனம் காக்கிறது. இப்படிப்பட்ட இரட்டை நிலைப்பாடு உடைய கட்சிக்கு வாக்களிப்பது என்பது, தமிழக மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதால் உங்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது.

உங்களுக்காக, உங்களின் நலன்களுக்காக போராடுகின்ற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். மீனவர் பிரச்சனையாக இருந்தாலும் சரி; விலைவாசி உயர்வு பிரச்சனையாக இருந்தாலும் சரி; இலங்கைத் தமிழர் பிரச்சனையானாலும் சரி; அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்சனையானாலும் சரி; தமிழகத்திற்காக; தமிழக மக்களுக்காக; குரல் கொடுக்கின்ற ஒரே மக்கள் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். குரல் கொடுப்பது மட்டுமல்ல, அந்தக் குரலுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழர் நலன் காக்கும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தான். தமிழர் நலன் காக்கும் அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

கடந்த மூன்று ஆண்டுகளில் முத்தான திட்டங்களை நாங்கள் உங்களுக்கு அளித்து வருகின்றோம். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்; விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்; ஏழை எளியோருக்கு வீடுகள் வழங்கும் திட்டம்; சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 1,000 ரூபாய் உதவித் தொகை; தாலிக்கு 4 கிராம் தங்கத்துடன் 50,000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கும் திருமண உதவித் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக எனது தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, உயர்ந்து வரும் விலைவாசியில் இருந்து ஏழை மக்களை காப்பாற்ற, என்னென்ன திட்டங்களை செயல்படுத்த முடியுமோ அவற்றை எல்லாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் அம்மா உணவகங்கள்; குறைந்த விலையில் மினரல் வாட்டர் வழங்கும் அம்மா குடிநீர்த் திட்டம்; குறைந்த விலையில் பல்வேறு வகையான உப்புகளை வழங்கும் அம்மா உப்புத் திட்டம்; குறைந்த விலையில் மருந்து மாத்திரைகளை வழங்கும் அம்மா மருந்தகங்கள்; குறைந்த விலையில் காய்கறிகளை வழங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்; குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு வகைகள் பாமாயில் வழங்கும் திட்டம் என, மக்கள் நலத் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கென பல்வேறு திட்டங்களை நாங்கள் செய்து கொடுத்து இருக்கிறோம். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

7 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும்

8 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவக் கருவிகள்; ஆ.சு.ஐ. ஸ்கேன் வசதி ஆகியவற்றை செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்த 8,767 கர்ப்பிணிப் பெண்களுக்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 10,146 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 18 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ஏழு நகர்ப்புற சுகாதார மையங்களில், மூன்று மையங்களுக்கு 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டவும்; 21 லட்சம் ரூபாய் செலவில் புதிய மருத்துவக் கருவிகள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 84 லட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகளை நாங்கள் செய்து தந்துள்ளோம். உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசின் நலத்திட்ட உதவிகளான, விலையில்லா மடிக்கணினி; நான்கு இணை சீருடைகள்; புத்தகப் பை; பாடப் புத்தகங்கள்; நோட்டுப் புத்தகங்கள்; கணித உபகரணப் பெட்டி; வண்ணப் பென்சில்கள்; காலணி; மிதிவண்டி மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை ஆகியவற்றை இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் சுமார் 88,000 மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர்.

உயர் கல்வியைப் பொறுத்த வரையில் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகள் 11 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்வெட்டு முற்றிலும், கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் நீக்கப்பட்டுவிட்டது. வாக்காளப் பெருமக்களே, இந்த 105 நாட்களில் 96 நாட்கள் மின் தடை ஏதுமின்றி தமிழகம் எங்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் நகராட்சித் துறையால் 413 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகளான, குடிநீர்த் திட்டப் பணிகள்; சாலைகள்; மழைநீர் வடிகால்கள்; திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் உள்ளிட்ட 445 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு; அவற்றில் பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 282 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பயன் பெறுவர்.

நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடி மாநகராட்சியுடன் ஐந்து ஊராட்சிகளை இணைத்துள்ளேன். இந்தப் பகுதிகளிலும் மாநகராட்சிக்கு இணையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையில்

20 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள நான் ஆணையிட்டுள்ளேன். 300 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டத்தை மேற்கொள்ள ஆணையிடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 10 அம்மா உணவகங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைத் துறையின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 11 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் 14 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் தூத்துக்குடி நகரத்திற்கு முதற்கட்டமாக வட்ட மற்றும் ஆரச் சாலைகள் அமைக்க விரிவான திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி - கொல்லம் சாலை மற்றும் மதுரை-தூத்துக்குடி சாலை ஆகியவை அகலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாநகராட்சிப் பகுதியில் பண்ணை பசுமை நுகர்வோர்க் கடை துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் காய்கறிகள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநகராட்சிப் பகுதியில் 1,932 நபர்களுக்கு பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 8,125 மீனவக் குடும்பங்களுக்கு 7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திரேஸ்புரத்தில் 16 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் 12 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் நவீனமயம் ஆக்கப்பட்டு வருகிறது. இப்படி உங்கள் நலனே எனது நலன் என செயல்பட்டுக் கொண்டு இருக்கும் அரசு எனது தலைமையிலான அரசு. தன்னலமற்ற முறையில் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சேவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு நான் செயல்பட்டு வருகிறேன்.

உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசின் மூன்று ஆண்டு கால சாதனைகளை எடை போட்டு; உங்களுக்காக உழைக்கும் எங்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், இந்த இடைத் தேர்தலில் எங்களை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தூத்துக்குடி மாநகராட்சியில் தொடர்ந்து உங்கள் அன்புச் சகோதரியின் அரசாட்சி என்பதை நீங்கள் நிலைநாட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில், கழகப் பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளருமான அன்புச் சகோதரி திருமதி ஹ.ஞ.சு. அந்தோணி கிரேஸி அவர்கள் போட்டியிடுகிறார். 1972 முதல் தொடர்ந்து மக்களுக்கு தொண்டாற்றி வரும் இவர், உங்கள் நலனுக்காக பாடுபடுவார்; உங்களையே சுற்றிச் சுற்றி வந்து உங்கள் குறைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப செயல்படுவார் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

உங்கள் பொன்னான வாக்குகளை இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்தில் செலுத்தி, அன்புச் சகோதரி ஹ.ஞ.சு. அந்தோணி கிரேஸி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொண்டு, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்று கூறி

விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.''

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்