முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடுருவலை தடுக்க கடலோர பகுதிகளில் கண்காணிப்பு படை

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.15 – தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நாவேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் பாகிஸ்தான் உளவாளிகள் தமிழகத்தில் ஊடுருவி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012–ம் ஆண்டு திருச்சியில் தமிம்அன்சாரி, கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் ஜாகீர் உசேன், தற்போது அருண் செல்வராசன் என பாகிஸ்தான் உளவாளிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்த கூட்டாளிகள் 4 பேரும் பிடிபட்டுள்ளனர்.

தமிம்அன்சாரி, ஜாகீர் உசேன் இருவரையும் ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர், அவர்கள் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாகவே அருண் செல்வராசன் பிடிபட்டுள்ளார். இவர்களில் ஜாகீர் உசேனும், அருண் செல்வராசனும் இலங்கை தமிழர்கள். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இவர்கள் இருவரையும் மூளைச்சலவை செய்து உளவாளியாக மாற்றியுள்ளனர்.

பாக். உளவாளிகள் மூலம் தமிழகத்தில் கடல் வழியாக ஊடுருவி மிகப்பெரிய தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.

சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களிலும் அருண் செல்வராசன் புகுந்து போட்டோக்களை எடுத்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதன் மூலம் இந்த இடங்களில் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மட்டுமின்றி கடலோர பகுதிகள் முழுவதிலும் தாக்குதல் நடத்துவதற்கு பாக். உளவாளிகள் திட்டம் போட்டு கொடுத்திருப்பதையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து சென்னை முதல் குமரி வரை கடலோர பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் துணையுடன் கடலோர பாதுகாப்பு படையினரும், போலீசாரும் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடலோர பாதுகாப்பு படையினருக்கு உதவிகள் செய்வதற்கும், சந்தேக நபர்கள் பற்றி உடனடியாக தகவல் கொடுப்பதற்கும், மீனவர்கள் அடங்கிய கிராம விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலோர பகுதிகள் அனைத்திலும் 490 கண்காணிப்பு குழுக்கள் தனிப்படைகள் போல செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழகம் முழுவதிலும் 35 ஆயிரம் மீனவ படகுகள் மூலமாகவும் கண் காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்கரை பகுதிகளில் மர்ம நபர்கள் ஊடுருவினால் அவர்களை விரட்டி பிடிக்க வசதியாக திடகாத்திரமான மீனவர்கள் 500 பேரும் ஊர்க்காவல் படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 4 மாதங்களாக இப்பணியில் ஈடுபட்டிருக்கும் இவர்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

கடலோர காவல் படையினருக்கு சொந்தமாக 24 அதிநவீன படகுகளிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த படகுகளில் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

கடலோரத்தில் உள்ள எந்த பகுதியிலும் தீவிரவாதிகள் நுழைந்து விட முடியாத அளவுக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்