முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மாநில இடைத்தேர்தல்: பாஜகவுக்கு பெரும் பின்னடைவு

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, செப்.17 - 9 மாநில இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கை ஓங்கியுள்ளது; ராஜஸ்தானிலும் ஆளும் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது.

மூன்று மக்களவை மற்றும் உ.பி.யின் 11, ராஜஸ்தானின் 4, குஜராத்தின் 9, மேற்கு வங்காளத்தின் 2, அசாமின் 3 மற்றும் சிக்கிம், திரிபுரா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 33 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. அத்தனை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. குஜராத் வதோதரா மக்களவை தொகுதி, மணிநகர் சட்டப்பேரவை தொகுதி, மேற்குவங்கத்தின் பசிராத் தக்‌ஷின் சட்டப்பேரவை தொகுதிகள் என அங்கொன்றும் இங்கொன்றுமாக பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் பரவலாக தோல்வியை தழுவியுள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. வெயர், நசீராபாத், சுராஜ்கர், கோட்டா ஆகிய 4 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது. கோட்டா தொகுதியை மட்டும் அக்கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் அம்மாநில பாஜக தலைவர் அசோக் பர்னமி கூறும்போது: "மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். கட்சித் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து செயல்படுவோம்" என்றார்.

தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்திலேயே முதல்வர் வசுந்தரா ராஜேவை சந்தித்த மாநில பாஜக தலைவர் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் பசிராத் தக்‌ஷின், சவுரிங்கீ ஆகிய 2 சட்டபேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளில், பாஜக வேட்பாளர் ஷமிக் பட்டாச்சார்யா பசிராத் தக்‌ஷின் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சவுரிங்கீ தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் ஹூசைன் கூறியதாவது: சில இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. முடிவுகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. மக்கள் உள்ளூர் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர். அதே வேளையில் மேற்குவங்கத்தில் தாமரை மலர்ந்துள்ளது மிகவும் நல்ல செய்தி. இடைத்தேர்தல் முடிவுகளை தேசிய மற்றும் மாநில அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகக் கூடாது என்றார்.

குஜராத் மாநிலத்தில் 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒரு மக்களவை தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 6 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு மக்களவை தொகுதி என மொத்தம் 7 இடங்களிலும் காங்கிரஸ் 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக குஜராத்தின் 26 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல் குஜராத் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீசா, மங்ரோல், கம்பாலியா ஆகிய மூன்று தொகுதிகளை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது.

இருப்பினும், குஜராத் மாநிலம் வதோதரா மக்களவை தொகுதியில் பாஜக 3 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திகல் வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி, வதோதரா தொகுதிகளில் வதோதரா தொகுதியிலிருந்து அவர் ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் பட் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர ராவத்தைவிட 3,29,507 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவந்திகா சிங் அறிவித்தார்.

தெலங்கானாவின் மேடக் மக்களவை தொகுதியில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் வேட்பாளர் கே.பிரபாகர் ரெட்டி 3,61,277 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தெலங்கானா முதல்வரானதால் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தெலங்கானாவின் மேடக் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதிக்கும் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் 7 இடங்களில் வெற்றி, 4 இடங்களில் முன்னிலை என சமாஜ்வாதி கட்சியின் கை ஓங்கியுள்ளது. தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்: "மக்களவை தேர்தலில் மதவாத சக்திகளால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால் இப்போது அவர்கள் உண்மை நிலை உணர்ந்துள்ளனர். மதவாத சக்திகளை தோற்கடித்துள்ளனர்" என்றார்.

அசாமின் லக்கிபூர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்தீப் கோலா, பாஜக வேட்பாளரை 9172 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ராஜ்தீப் கோலா பெற்ற மொத்த வாக்குகள் 40,090 ஆகும். மொத்தம் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

சிக்கிம் மாநிலத்தில் சுயேட்சை வேட்பாளர் ரூப் நாராயணன் சாம்லிங் வெற்றி பெற்றார். இம்மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. களத்தில் பாஜக, காங்கிரஸ், சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளும் இருந்தன. இம்மூன்று கட்சி வேட்பாளர்களையும் வீழ்த்தி சுயேட்சை வேட்பாளர் ரூப் நாராயணன் சாம்லிங் வெற்றி பெற்றுள்ளார்.

திரிபுராவில் நடந்த ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரவத் சவுத்ரி வெற்றி பெற்றார். விவசாயத் துறை முன்னாள் ஊழியரான இவர் 21,759 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமையாத நிலையில், பிரித்தாளும் அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago