முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியை சந்திக்க மாட்டேன்: மு.க.அழகிரி ஆவேசம்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.18 - நான் சமரசமாகி விட்டதாக சிலர் கூறுவது உண்மை இல்லை; தி.மு.க.வினர் அனைவரும் ஸ்டாலின் தலைமையை ஏற்கமாட்டார்கள் என்று மு.க அழகிரி மீண்டும் கூறியுள்ளார்.

திமுகவில் கடந்த ஓராண்டாகவே அடுத்த தலைவர் மற்றும் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டன. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு கட்சியில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், திமுக பற்றி பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், கட்சி நடவடிக்கைகளில் கருணாநிதி தீவிரம் காட்டத் தொடங்கினார். ஸ்டாலினுக்கு ஆதரவாக கடிதம் எழுதிய அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, கருணாநிதியின் விசுவாசியான டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் ஸ்டாலின் தரப்பை அதிர்ச்சியடைய வைத்தது.

. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை ஸ்டாலின் எங்கே பேசினாலும், ‘திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராவார்’ என்றுதான் கூறிவந்தார்.

ஆனால், சமீபகாலமாக அதுபோன்ற வார்த்தைகளை அவர் கூறவில்லை. மேலும், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று ஆதரவாளர்கள் குரல் கொடுத்தபோதும், மவுனமாகவே இருந்தார்.

இந்நிலையில், அரசியல் வல்லுநர்கள் ஆலோசனை கூறிய பிறகு ஸ்டாலின் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘தலைவரின் அடி ஒற்றி நடப்பவன் நான். தலைவரின் அறிவு, ஆற்றல், அரசியல் வியூகம் ஆகிய குணங்களை பெற்றவர்கள் தோன்றுவது அரிது. எனக்கும் கருணாநிதிக்கும் இடையே பிளவை உருவாக்க முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் பேசுகையில், "முப்பெரும் விழாவில் பேசிய ஸ்டாலின் தனது மனமாற்றத்தை உறுதிப்படுத்தி யுள்ளார். 2016-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில்தான் ஆட்சி என்று அவர் அறிவித்ததைக் கேட்டு அழகிரி, கனிமொழி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்டாலினின் இந்த மனமாற்றம் கருணாநிதிக்கும் மிகுந்த மன மகிழ்ச்சியை அளித்துள்ளது’’ என்றனர்.

இதற்கிடையே மிசா பாண்டியனுடன் கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜீவன் ரமேஷ் ஆகியோரும் கருணாநிதியிடம் மன்னிப்பு கடிதம் அளித்தனர்.அதில் தலைமை திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மிசா பாண்டியன் மட்டுமே கட்சியில் சேர்க்கப்பட்டார்.

இவர்கள் தவிர, மதுரையில் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்ட 20 பேர் இதுவரை விளக்கக் கடிதம் எழுதித் தரவில்லை. அந்த 22 பேரையும் கட்சியில் சேர்த்த பின்னரே, தான் கட்சிக்குள் வரமுடியும் என்று அழகிரி கூறியிருக்கிறார். எனவே, அவர்களிடம் கடிதம் பெற்று கட்சியில் சேர்க்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும். அதன் பின்னர் அழகிரி கட்சிக்குள் வருவார் என்கின்றனர் திமுகவினர்.

இதையொட்டி அழகிரி சமரசமாகி விட்டதாக சிலர் கூறி வந்தனர்.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேரலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. அதற்கான முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் மு.க.அழகிரி ஒரு அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது:

தமிழர்கள், தி.மு.க.வினர் அனைவரும் தலைவராக கருணாநிதியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நானும் இதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன்.

கொள்கை பிடிப்புள்ள அனைவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலைமையைத்தான் ஏற்றுக் கொள்வார்கள். ஸ்டாலின் தலைமையை ஏற்கமாட்டார்கள்.

தி.மு.க.வில் நடைபெறும் உள்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை. கட்சியில் இல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து தேர்தல் நடத்துகிறார்கள். இதை நான் ஆதாரத்துடன் கொடுக்க தயாராக இருக்கிறேன். நெல்லை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. என்னுடைய கோரிக்கைகள் எதுவுமே நிறைவேறவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியை நான் சந்திக்க தேவை இல்லை. சந்திக்க மாட்டேன்.

நான் தி.மு.க.வில் சமரசமாகி விட்டதாக சிலர் கூறுவது உண்மை இல்லை. இதுபோன்று சொல்வதால் சமரசம் ஏற்பட்டுவிடாது. நான் கட்சியில் இல்லாததால் உண்மையான கட்சிக் காரர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை. மற்றபடி நான் கட்சியில் சேரலாம் என்று வந்த செய்தியால் கட்சி நிர்வாகிகள் யாரும் பயப்பட வில்லை.

இவ்வாறு மு.க.அழகிரி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்