முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆந்திரா அமைச்சர் குழு பாராட்டு

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.20 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படிசென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர், விக்ரம் கபூர், தலைமையில் சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை மூலம் ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்களை தற்பொழுது 203 எண்ணிக்கையில் அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் செயல்படுத்தி வருகிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, நேற்று ரிப்பன் கட்டட வளாகத்தில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, விலைக்கட்டுப்பாடு, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் பரிட்டலா சுனிதா, நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் டாக்டர். பி. நாராயணா, வேளாண்மைத்துறை அமைச்சர் பிரத்திபட்டி புல்லா ராவ் ஆகியோர்கள் அடங்கிய குழு சந்தித்தது. இக்குழுவிற்கு முதன்மைச் செயலர்/ஆணையாளர், சென்னை மாநகராட்சி விக்ரம் கபூர், அம்மா உணவகங்கள் குறித்தும், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார்.

இக்குழு சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள அம்மா உணவகத்தைப் பார்வையிட்டது. இந்த அம்மா உணவகத்தில் உள்ள பொருள்கள் வைக்கும் அறை, சமையலறை, சாப்பாடு வழங்கும் இடம், சாப்பிடும் அறை, பாத்திரங்கள் கழுவும் அறை, சாப்பிடுவதற்கு டோக்கன் வழங்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு வழங்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு, உணவு தரமாகவும், சுகாதாரமாகவும், சுவையாகவும் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இக்குழுக்கள் அம்மா உணவகத்திற்கு தேவையான பொருள்கள் எங்கிருந்து வாங்கப்படுகின்றன எனவும், இங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை குறித்தும், பணியாளர்களின் பணி நேரம் குறித்தும், சுத்தமான, சுகாதாரமான, சுவையான உணவு தயாரிக்கும் முறை குறித்தும், சுத்தமான தண்ணீர் வழங்கப்படும் முறை குறித்தும், பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தும் முறைகளையும், இவற்றிற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

அமைச்சர் பெருமக்கள் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் இங்கு வழங்கப்படும் உணவுகளின் தரம், சுவை, சுகாதாரம் போன்றவை குறித்து கேட்டனர். அதற்கு பொதுமக்கள் இங்கு வழங்கப்படும் உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவையாகவும் மற்றும் குறைந்த விலையிலும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

அமைச்சர் பெருமக்கள், இந்த அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் விலை குறைவாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவையாகவும், சிறப்பாகவும் இருக்கிறது எனவும், ஏழை எளிய மக்கள் மட்டுமன்றி, அனைத்து பிரிவினர்களும் இந்த அம்மா உணவகத்தில் சாப்பிடுவதைக் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது எனவும், இந்த அம்மா உணவகங்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் உணவுகளை அளிப்பது மட்டுமல்லாமல் மகளிருக்கான வேலைவாய்ப்பினையும் உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்தனர். மேலும், நிர்வாகத்திறன் மிக்க இந்த அம்மா உணவகத்தைப் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அம்மா உணவகத்தை எங்களது அமைச்சர் பார்த்துவிட்டு வந்தபிறகு, எங்களது முதலமைச்சர் உடனடியாக ஒரு குழுவினை அமைத்தார். அக்குழுதான் நேற்று அம்மா உணவகங்களைப் பார்வையிட்டு வருகிறது. விரைவில் தங்களது மாநிலத்திலும் முக்கியமான மாநகராட்சிகளில் இதுபோன்ற மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்க இந்த அம்மா உணவகங்களை திறந்து வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இக்குழு உறுப்பினர்கள் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

பின்னர் இக்குழுவினர் சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சிகளில், சென்னை மாநகராட்சி துணை மேயர் பா. பென்ஜமின், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.லட்சுமி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நுகர்பொருள் வழங்கல்துறை இயக்குநர்

ஜி.ரவி பாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குநர் வாணி மோகன், அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் எம்.வி.சாலமன் ஆரோக்கியராஜ், குண்டூர் மாவட்ட ஆட்சியர்

காந்திலால் தண்டே, சித்தூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜெயின், விசாகப்பட்டினம் துணை ஆட்சியர் பிரவீன்குமார், நெல்லூர் மேயர் அப்துல் அஜீஸ் அனந்தபூர், விசாகப்பட்டினம், குண்டூர், சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய மாநகராட்சிகளின் ஆணையாளர்கள், ஆந்திர மாநில நுகர்பொருள் வழங்கல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்