முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை பாசனத்திற்கு அக்., முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பு

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, செப் 21 - பெரியாறு, வைகை பாசனத்தில் மதுரை மாவட்டத்தின் ஒரு போக பாசன பகுதிக்கு அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக மாவட்ட கலெக்டர் எல். சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய்  அலுவலர் சிற்றரசு, வேளாண் இணை இயக்குனர் ஜெய்சிங் ஞானதுரை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பெரியாறு பாசன திட்டத்தில் ஒரு போக பாசன பகுதிக்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அரசாணைப்படி செப்டம்பர் 15ம் தேதியே தண்ணீர் திறக்க வேண்டும். இருப்பினும் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. பெரியாறு, வைகை அணைகளில் போதிய தண்ணீர் இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த மாவட்ட கலெக்டர், தண்ணீர் திறப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். மதுரை மாவட்டத்தில் வறட்சியால் பட்டுப்போன தென்னை, மா மரங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி பாதிப்பு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வேளாண் துறை செயலரும் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். மேலும் விவசாயிகளின் குறுகிய கால கடன்களை நீண்ட கால கடன்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.

கூட்டுறவு சங்கங்களில் கடன் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் நிர்வாக குழு பரிந்துரைப்பவர்களுக்கே கடன் வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதையடுத்து விண்ணப்பம் அளி்ப்பவர்களில் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு இணை பதிவாளருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்