முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக பிரதிநிதிகளை திரும்ப பெற வேண்டும்: தா. பாண்டியன்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

ஈரோடு, செப் 21 - இலங்கையில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்பதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற விவசாய தொழிலாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாடு நிறைவு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இலங்கையில் இன அழிப்பு கொள்கையை அங்குள்ள அதிபர் ராஜபக்சேவும், ஆட்சியாளர்களும் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு முழு அரசியல் உரிமை விடுதலை கிடைக்க வேண்டும் என்பது தான் தாய் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்களின் எண்ணம். அதற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் தமிழர்களின் உணர்வுகளை மத்தியில் ஏற்கனவே ஆண்ட காங்கிரஸ் அரசும், இப்போதுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசும் தொடர்ந்து அவமதித்து வருகின்றன. இலங்கை நட்பு நாடு. அந்த நாட்டின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது என தனது பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழித்து வருகிறது. இலங்கைக்கு ஏற்கனவே சென்ற மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா, இலங்கை அரசுக்கு பாராட்டு சான்றிதழ் அளித்து வந்தார். இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது ஐ.நா மேற்பார்வையில் விசாரணை நடத்த அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டை இலங்கை அரசு நடத்துகிறது. இதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட 2 நிர்வாகிகள் கொழும்புக்கு சென்றிருப்பது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயலாகும். இது கண்டனத்துக்குரியது. இலங்கைக்கு அனுப்பிய தங்களது பிரதிநிதிகளை பாஜக திரும்ப பெற வேண்டும். சர்வதேச அழுத்தத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் இலங்கையின் ராஜதந்திர நடவடிக்கைக்கு மத்திய அரசும், பாஜகவும் துணை போக கூடாது என்றார். பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், முன்னாள் எம்.பி. சுப்பராயன், முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமி, மாவட்ட செயலர் திருநாவுக்கரசு ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்