முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக இடைத்தேர்தல்: பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, செப் 22:

தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்குகளை எண்ணுவதற்காக அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை உடனுக்குடன் அறியவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் ஒரு சில மணி நேரத்திலேயே தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தடைகளை தாண்டி இந்த இடை தேர்தல் கடந்த 18ம் தேதி அமைதியாக நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் களமிறங்கின. மற்ற கட்சிகள் தேர்தலில் பங்கேற்கவில்லை. 3 மேயர் பதவி, 8 நகரசபை தலைவர் பதவி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நெல்லையில் அதிமுக மேயர் வேட்பாளராக புவனேஸ்வரியும், தூத்துக்குடி மேயர் வேட்பாளராக அந்தோணி கிரேஸூம், கோவை மேயர் வேட்பாளராக கணபதி ராஜ்குமாரும் அறிவிக்கப்பட்டனர். இவர்களில் நெல்லை அதிமுக மேயர் வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் களமிறங்கிய வெள்ளையம்மாள் போட்டியில் இருந்து விலகி கொண்டதை அடுத்து புவனேஸ்வரி ஒரு மனதாக மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் பாஜகவின் வெள்ளையம்மாள் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இதையடுத்து 2 மேயர் பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. அதே போல் நகராட்சி தலைவர் பதவி, வார்டு உறுப்பினர் பதவி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்பே 2,579 அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த சூழலில் கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இவ்வாறு பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று 22ம் தேதி எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. இதற்கான பயிற்சி அதிகாரிகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டது. வாக்கு எண்ணும் இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மேயர் பதவிக்கு நடந்த தேர்தலில் 1276 வாக்குசாவடிகளில் பதிவான வாக்குகள்அடங்கிய மின்னணு எந்திரங்கள் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இன்று வாக்குகள் எண்ணப்படும் போது 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். 500 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். இதையொட்டி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போல் தூத்துக்குடி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு எந்திரங்கள் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் மின்னணு எந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை சில மணி நேரத்தில் முடியும் என்று கூறிய அவர், 6 ரவுண்டில் அனைத்தும் முடிந்து விடும் என்று தெரிவித்தார். திருச்சியில் வார்டு 15 மற்றும் வார்டு 32 ஆகிய வார்டுகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதே போல் தமிழகம் முழுவதும் வார்டு உறுப்பினர் பதவிக்கு பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. முன்னதாக இந்த தேர்தலுக்காக முதல்வர் ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மற்றும் கோவை நகரங்களில் மின்னல் வேக பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பாரதீய ஜனதாவை தாக்கி பேசினார். மீனவர் பிரச்சினையில் பாஜக  இரட்டை வேடம் போடுகிறது என்று கூறிய அவர், பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கு வாக்களிப்பதால் எந்த பலனும் ஏற்படாது என்று குறிப்பிட்டார். தனது அரசின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டு பேசினார். இந்த சூழலில் இன்று உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்