முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லையில் 100.மீ தூரத்திற்கு சீன வீரர்கள் ஊடுருவல்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப் 22:

இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள லடாக் பகுதியில் இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. சமீபத்தில் சீன ராணுவத்தின் சீன மக்கள் விடுதலை ராணுவம் மற்றும் மக்கள் ஆயுத போலீஸ் ஆகிய 2 படை பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் வட கிழக்கு லடாக் பகுதியின் சூமார் என்ற இடத்தில் ஊடுருவலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் சீன அதிபர் இந்தியா வந்திருந்தார். ஜி ஜின்பிங்  அவரிடம் சீன ராணுவத்தின் ஊடுருவல் பற்றி பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். அப்போது அவர் எல்லை பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பதாக உறுதி அளித்து இருந்தார். அதன் பிறகும் சீன படைகளின் ஊடுருவல் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த நிலையில் சூமார் பகுதியில் சீனா கூடுதலாக வீரர்களை குவித்து வருகிறது. நேற்று முன்தினம் சூமார் பகுதியையொட்டி 100 மீ தொலைவுக்கு 100 வீரர்கள் ஊடுருவினார்கள். அவர்களுக்கு உதவியாக சற்று தூரத்தில் மேலும் 500 சீன வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 4 லாரிகள், 3 ஜீப்புகளில் வந்து இறங்கினார்கள். நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு எல்லையில் வரிசையாக நிறுத்தப்பட்டனர்.

அங்கு 7 கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர். நீண்ட நாள் தங்கும் திட்டத்துடன் கடும் குளிரையும் தாங்கும் வகையில் கூடாரங்களை அமைத்துள்ளனர். ஊடுருவலில் ஈடுபட்டு எல்லையில் தங்கியுள்ள ராணுவ வீரர்களுக்கு சீன ராணுவ ஹெலிகாப்டர்களில் உணவு சப்ளை செய்யப்படுகின்றன. இதையடுத்து இந்தியாவும் சூமார் பகுதியில் படைகளை குவித்து வருகிறது. அங்கு இந்திய எல்லையில் ஆயிரம் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சீன அதிபர் உறுதி அளித்த பின்பும் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பது இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக தூதரக மட்டத்தில் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியில் ஒரு லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் கிழக்கு பகுதி எல்லையில் அசாம் ரைபிள் படை பிரிவை சேர்ந்த 40 ஆயிரம் வீரர்கள் நிறுத்தப்பட்டு  இருக்கிறார்கள். தற்போது சீன ராணுவம் ஊடுருவலில் ஈடுபட்டுள்ள லடாக் பகுதியில் 10 ஆயிரம் இந்திய வீரர்கள் உள்ளனர். இவர்களில் ஆயிரம் வீரர்கள் சீனா ஊடுருவல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே சீனா மேலும் 500 வீரர்களை ஊடுருவல் பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாகவும் அவர்கள் சூமார் பகுதி நோக்கி முன்னேறி வந்து கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சீன படைகளின் ஊடுருவலை செயற்கைகோள் உதவியுடன் இந்திய ராணுவம் கண்காணித்து வருகிறது. சீனாவின் ஊடுருவல் குறித்து பிரதமர் மோடி, ராணுவ மந்திரி அருண்ஜெட்லி ஆகியோர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்டோவல், ராணுவ தலைமை தளபதி தல்பீர் சுகாக், ராணுவ இலாகா செயலாளர் மாத்தூர் ஆகியோருடன் தினமும் ஆலோசனை நடத்தி நிலைமைகளை கண்காணித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்