முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்ளையை தடுக்க ஆம்னி பஸ்களில் கண்காணிப்பு கேமிரா

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 22 – சென்னையில் இருந்து தினமும் 1200 ஆம்னி பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதில் தினந்தோறும் 75 ஆயிரம் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்கின்றனர்.

பண்டிகை காலங்களின் போது தினமும் 2 லட்சம் பயணிகள் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார்கள். நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. பயணிகளின் உடைமைகள், கைப்பையில் இருக்கும் பணம் போன்றவை கொள்ளையடிக் கப்படுகின்றன.

டிரைவர்–கிளினர் ஆகியோர் பயணிகள் இருக்கைக்கு செல்லும் வழியை மூடி விட்டு முன்புறம் அமர்ந்து கொள்வதால் அவர்களால் திருட்டு சம்பவங்களை கண்காணிக்க முடிவதில்லை.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய போதுதான் தங்கள் பைகள் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதாகவும், நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கிறார்கள். குற்றவாளிகள் எங்கு ஏறுகிறார்கள் எங்கு இறங்குகிறார்கள் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

மேலும் தனியாக செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

ஆம்னி பஸ்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒரு மனுவை கோயம்பேடு உதவி கமிஷனர் மோகன்ராஜிடம் கொடுத்தனர். அப்போது ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு உதவி கமிஷனர் மோகன்ராஜ் சில அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறியதாவது:–

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் 66 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடப்பது தடுக்கப்படுகிறது. அதை மீறி ஒன்றிரண்டு திருட்டு சம்பவங்கள் நடந்தாலும் கண்காணிப்பு கேமரா உதவியால் குற்றவாளிகள் எளிதில் பிடிபட்டு விடுகிறார்கள்.

ஆனால் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இது வரை ஒரு இடத்தில் கூட கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையர்கள் எளிதில் தப்பி விடுகிறார்கள். எனவே அனைத்து ஆம்னி பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள். இதே போல் பஸ் நிற்கும் அனைத்து பிளாட்பாரங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள். இதன் மூலம் வெளியூர்களில் இருந்து பஸ் வரும் போது பயணிகளின் உடமைகளை திருடும் குற்றவாளியின் உருவம் அதில் பதிவாகி விடும். மேலும் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் நபர்களையும் கண்டறிய முடியும்.

அதே போல் பிளாட் பாரங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் மூலம் பஸ் நிலையத்தில் நடமாடும் கொள்ளையர்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். மேலும் புரோக்கர்களின் நடமாட்டத்தையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

பண்டிகை காலம் நெருங்குவதால் அதற்குள் ஆம்னி பஸ்கள் மற்றும் பஸ் நிலைய பிளாட்பாரங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரது கருத்தை ஏற்றுக் கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் வருகிற ஆயுத பூஜைக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதன் மூலம் இனி ஆம்னி பஸ்களில் திருட்டை தடுக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்