முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை - தூத்துக்குடி அதிமுக மேயர் வேட்பாளர்கள் வெற்றி

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

மதுரை, செப் 23 - தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அதிமுக வேட்பாளர்களே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர். நெல்லை அதிமுக மேயர் வேட்பாளர் ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்று விட்ட நிலையில் கோவை, தூத்துக்குடி அதிமுக மேயர் வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதே போல் கடலூர், விருத்தாச்சலம், அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தடைகளை தாண்டி இந்த இடை தேர்தல் கடந்த 18ம் தேதி அமைதியாக நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் களமிறங்கின. மற்ற கட்சிகள் தேர்தலில் பங்கேற்கவில்லை. 3 மேயர் பதவி, 8 நகரசபை தலைவர் பதவி, பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நெல்லையில் அதிமுக மேயர் வேட்பாளராக புவனேஸ்வரியும், தூத்துக்குடி மேயர் வேட்பாளராக அந்தோணி கிரேஸூம், கோவை மேயர் வேட்பாளராக கணபதி ராஜ்குமாரும் அறிவிக்கப்பட்டனர். இவர்களில் நெல்லை அதிமுக மேயர் வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் களமிறங்கிய வெள்ளையம்மாள் போட்டியில் இருந்து விலகி கொண்டதை அடுத்து புவனேஸ்வரி ஒரு மனதாக மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் பாஜகவின் வெள்ளையம்மாள் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இதையடுத்து 2 மேயர் பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. அதே போல் நகராட்சி தலைவர் பதவி, வார்டு உறுப்பினர் பதவி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்பே 1,589 அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முன்னதாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் தனது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். 14ம் தேதியன்று தூத்துக்குடியில் மேயர் வேட்பாளர் அந்தோணி கிரேஸை ஆதரித்து அவர் நகரின் முக்கிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். மறுநாள் 15ம் தேதியன்று கோவையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். கோவை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் மற்றும் கோவையின் வளர்ச்சிக்காக அதிமுக அரசு செய்த ஒதுக்கீடுகளையும் முதல்வர் பட்டியலிட்டார்.  இந்த சூழலில் கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை வீடியோ கேமிராவில் பதிவு செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே அதிமுக வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் முன்னணியில் இருந்தார்கள். கோவை அதிமுக மேயர் பதவிக்கு போட்டியிட்ட கணபதி ப. ராஜ்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் நந்தகுமாரை விட 2 லட்சத்து 91 ஆயிரத்து 343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 11வது சுற்று எண்ணிக்கையின் முடிவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை நகராட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கோவை சுகுணாபுரம் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிட்ட அந்தோணி கிரேஸி ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 593 வாக்குகள் பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயலெட்சுமியை விட  84,885 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜகவின் ஜெயலெட்சுமி 31,708 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளரின் வெற்றியை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். மேயர் பதவிகளை கைப்பற்றிய அதிமுக 4 நகராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 8 நகராட்சி தலைவர் பதவிகளில் ஏற்கனவே அதிமுக 4 நகராட்சி தலைவர் பதவிகளை போட்டியின்றியே கைப்பற்றி விட்டது. அவற்றில் புதுக்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட நகராட்சிகள் அடங்கும். மீதமுள்ள ராமநாதபுரம், கடலூர், விருத்தாச்சலம், அரக்கோணம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இடை தேர்தல் நடந்தது. இந்த நான்கையுமே அதிமுக கைப்பற்றி விட்டது.

கடலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் குமரன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 57,258 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இ. கம்யூனிஸ்டு கட்சியின் மாதவன் வெறும் 6,292 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் செல்வம் வெறும் 4,954 வாக்குகள் மட்டுமே பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆக, கடலூரில் அதிமுக வேட்பாளர் குமரன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ராமநாதபுரத்தில் நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக சந்தானலெட்சுமி போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் துரை கண்ணனை விட 13,057 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 20,442 ஆகும். பாஜக வேட்பாளர் துரைகண்ணன் 7,385 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற சந்தானலெட்சுமி அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார். இந்த வெற்றியை ராமநாதபுரம் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதே போல் விருத்தாச்சலம் நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட  அருளழகன், கிட்டத்தட்ட 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அரக்கோணம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கண்ணதாசன் கிட்டத்தட்ட 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 2,130 பதவிகளில் 1,589 அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 530 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பெரும்பாலும் அதிமுகவினரே அமோக வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றி முதல்வரின் நலத்திட்டங்களுக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி என்று அமைச்சர் கோகுல இந்திரா, பா. வளர்மதி ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். பேரூராட்சி தலைவர் பதவிகளையும் அதிமுகவே கைப்பற்றி உள்ளது. மடத்துக்குளம் பேரூராட்சியில் பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இதே போல் வார்டு உறுப்பினர் பதவிகளையும் அதிமுக கணிசமாக கைப்பற்றி உள்ளது. மதுரையில் 4வது வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் சண்முகம் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மேயர் ராஜன்செல்லப்பா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். திருப்பூர் 22வது வார்டில் அதிமுக வேட்பாளர் கலைமகள் கோபால்சாமி வெற்றி பெற்றார். ஈரோடு 60வது வார்டில் பாலசுப்பிரமணியம் வெற்றி பெற்றுள்ளார். சென்னையில் 35வது வார்டில் டேவிட் ஞானசேகரன் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை மேயர் சைதை துரைசாமி மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். விழுப்புரத்திலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கனியை தட்டிப் பறித்து சென்றனர். இப்படி தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களே நடந்து முடிந்த இடைதேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளனர். இதையடுத்து வாக்காளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago