முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படைகள் வாபஸ் பெற மறுப்பு: சீன அதிபர் போர் மிரட்டல்

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

 

பெய்ஜிங், செப் 24 - எல்லை பகுதியில் இருந்து வாபஸ் பெற சீனப்படைகள் மறுத்து விட்டன. இந்த நிலையில் சீனாவின் இறையாண்மையை காக்க பிராந்திய அளவிலான போரை நடத்தவும் தயங்க மாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து இந்திய ராணுவ தளபதி சுகாக் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டார்.

1960களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான யுத்தம் நடைபெறவில்லை என்ற போதிலும் அவ்வப்போது சிறிய அளவில் மோதல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு லடாக்கில் உள்ள தவ்லத் பெக் ஓல்டி என்ற இடத்தில் சீனப்படையினர் முகாமிட்டனர். அவர்களை வெளியேற்ற இந்திய தரப்பு முயற்சி மேற்கொண்டது. ஆனால் இந்திய காப்பரண்களை அகற்றினால்தான் வெளியேற முடியும் என்று சீன தரப்பு நிபந்தனை விதித்தது. இறுதியில் வேறு வழியின்றி காப்பரண்களை இந்தியா அகற்றியது. இதன் பிறகே சீன ராணுவ வீரர்கள் திரும்பி சென்றனர்.

1960களின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் சீன பிரதமர் சூயென்லாயும் நெருக்கமாக இருந்த போதிலும் அருணாசல பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்தது. இந்நிகழ்வு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. காலவோட்டத்தில் விரிசல் தணிந்து விட்டது என்ற போதிலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு திருப்திகரமாக இருக்கிறது என்று கூற முடியாது. காஷ்மீருக்குள் சீன படையினர் ஊடுருவி உள்ளனர். லடாக்கில் உள்ள சுமர் பகுதியில் நூற்றுக்கணக்கான சீன ராணுவ வீரர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இந்திய ராணுவ வீரர்கள் கூறினார்கள். ஆனால் சீன ராணுவ வீரர்கள் அதை ஏற்கவில்லை. மாறாக இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவ வீரர்களை சுற்றி வளைத்தார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் அங்கு திரண்டு சென்றனர். இதன் பிறகு நிலைமை ஓரளவு சீரடைந்தது. லடாக் பகுதியில் சீனப்படை வீரர்கள் அத்துமீறியுள்ளதை சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கவனத்திற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றார். அத்துமீறல் நடைபெற்றிருந்தால் சீனப்படை வீரர்களை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜி ஜின்பிங் உறுதியளித்தார். ஆனால் அதே நேரத்தில் இரு தரப்பாலும் ஏற்பளிக்கப்பட்ட எல்லை நிர்ணயம் செய்யப்படாததுதான் பிரச்சினைக்கு மூல காரணம். எனவே துல்லியமாக எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதுவரை இப்பிரச்சினை ஓயாது என்பதையும் ஜி ஜின்பிங் குறிப்பிடத்தவறவில்லை. இந்தியாவுக்குள்ளும் சீனர்கள் சாலை அமைத்து வருகிறார்கள். அதற்கான கட்டுமான பொருட்களையும் இதர தளவாடங்களையும் சீனாவில் இருந்து கொண்டு வருகிறார்கள். லடாக்கில் உள்ள டிபிள் என்ற இடம் சீன எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த இடம் வரை சாலை அமைத்தே தீர வேண்டும் என்பதில் சீனர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த இந்திய தரப்பு மேற்கொண்ட முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்தியாவுக்குட்பட்ட பகுதியில் சீனர்கள் 7 கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர். 4 டிரக்குகள், 3 ஜீப்புகள் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எல்லைக்கு அப்பால் தங்கியுள்ள 500 சீன ராணுவத்தினர் இவர்களுக்கு தேவையானவற்றை அவ்வப்போது அளித்து வருகிறார்கள். உணவு பொட்டலங்களையும் வழங்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சீன ராணுவ வீரர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் இடம் நடுங்க வைக்கும் குளிர் மிகுந்த பகுதியாகும். அங்கு மைனஸ் 3 டிகிரி சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இம்மாதம் 10ம் தேதி எத்தகைய நிலை காணப்பட்டதோ அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனால் சீனா இதை பொருட்படுத்த மறுக்கிறது. சுமரில் 800 சீன ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். சுமர் அருகே 1,800 இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் 1,05,000 இந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு லடாக் பகுதியில் மட்டும் 15,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 15 படை பிரிவுகளை லடாக் பகுதிக்கு அனுப்ப இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு படைபிரிவில் 800 வீரர்கள் உள்ளனர். 1 5 படை பிரிவுகளில் மொத்தம் 12,000 வீரர்கள் உள்ளனர். தேவைப்பட்டால் அசாம் ரைபில்சை சேர்ந்த 40 ஆயிரம் ராணுவ வீரர்களை எல்லை பகுதிக்கு அனுப்பவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இன்று டெல்லியில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த செய்தியாளர்கள் சந்தித்து பேசுவதற்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செ்யயப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வரும் சீனாவின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் ஆசிரியர்களுக்கு இந்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. ஆனால் எல்லையில் பதட்டம் அதிகரி்த்ததையடுத்து அனுமதியை இந்திய அரசு ரத்து செய்தது. சீன கம்யூனிஸ்டு கட்சிபொதுச் செயலாளராகவும், சீன அதிபராகவும் சீன மைய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் உள்ளார். சீனாவின் இறையாண்மையை நிலைநாட்ட பிராந்திய அளவிலான போரை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு சீனா சற்றும் தயங்காது என்ற தொணியில் ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.

சீன ராணுவத்தினர் போரை சந்திக்க ஆயுத்த நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சீன ராணுவத் தளபதி பெங்குய் முன்னிலையில் முக்கிய ராணுவ அதிகாரிகளுடன் ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தினார். சில அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் கொடுக்கப்பட்டது. இத்தகவல்களை சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்குவா வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சீர்குலையாதவாறு பார்த்து கொள்ளப்படும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம் என்று சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் குவா சுன்யின் தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் யுத்த பேச்சு இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியிடம் எல்லை பகுதி நிலவரத்தை ராணுவ தளபதி சுகாக் எடுத்துரைத்தார். ராணுவ தளபதி பதவியை ஏற்ற பிறகு முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள சுகாக் திட்டமிட்டு இருந்தார். ஆனால் எல்லை பகுதியில் போர் மேகம் சூழ்ந்ததை அடுத்து தனது 3 நாள் வெளிநாட்டு பயணத்தை சுகாக் ரத்து செய்து விட்டார். இந்திய படையினரும் சீன படையினரும் காஷ்மீர் எல்லை பகுதியில் 8 முக்கிய நிலைகளில் நேருக்கு நேர் நிற்கிறார்கள். சில இடங்களில் இரு தரப்புக்கும் இடையிலான இடைவெளி 700 மீட்டராக உள்ளது. அதிகபட்ச இடைவெளி 1.5 கி.மீட்டராக உள்ளது. பிரச்சினைக்கு தீர்வு காண இரு தரப்பிலும் ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago