முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜனதா அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.24 - இந்தி பேசும்மாநிலங்களுக்காகவே பாரதீய ஜனதா செயல்படுகிறது என்றும், ஒட்டு மொத்த இந்தியாவிற்காகவும் அவர்கள் திட்டம் வகுக்கவில்லை என்றும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், விஜயதாரணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய கூட்டணி தோல்வி அடைந்து இருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். புதிய அரசு அமைந்திருக்கிறது. புதிய அரசை அன்னிய அரசாக கருத கூடாது. இந்திய குடிமகனாக அரசின் விளைவுகளை நாம் தான் சந்திக்க வேண்டும். அதற்காக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனிக்க வேண்டும். விமர்சனம் செய்ய வேண்டும்.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு கிடைத்தது 31 சதவீத வாக்குகள், காங்கிரஸ் கட்சிக்கு 19 சதவீத வாக்குகள். 69 சதவீதம் மக்கள் அவர்களுக்கு எதிராகவே வாக்களித்து இருக்கிறார்கள். எதிர்கட்சிகளின் ஓட்டுக்கள் சிதறியதே இதற்கு காரணம்.

பா.ஜனதாவின் வெற்றியை அலசி பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். இந்தியாவில் 11 மாநிலங்களில் இந்தி பேசுகிறார்கள். 7 மாநிலங்களில் இந்தி பேசுவதில்லை. இதில் இந்தி பேசும் 11 மாநிலங்களில் பாரதீய ஜனதா 89 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. இந்தி பேசாத இடங்களில் 23 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த 11 மாநிலங்களை வைத்து தான் அவர்கள் ஆட்சி நடக்கிறது.

ஆகவே இந்த 11 மாநிலங்களில் வெற்றி பெற்று விட்டால் ஆட்சியை பிடித்து விடலாம் என்று அவர்கள் கணக்கு போடுகிறார்கள். அதற்காகவே திட்டங்களை வகுக்கிறார்கள். இந்தியை ஏன் ஆதரிக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா? இது ஆபத்தானது. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு, அவர்களுக்கு மட்டும் திட்டங்களை செயல்படுத்தினால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.

சீன அதிபரிடம் நரேந்திரமோடி பேசிக்கொண்டிருக்கும்போது தான் இந்தியாவில் சீன ஊடுருவல் இருந்தது. இதென்ன கொள்கை. இலங்கை பிரச்சினையில் என்ன நடக்கிறது. மீனவர்களின் படகுகள் ஏன்? விடுவிக்கப்படவில்லை. விடுவிக்க முடியாது என்று ராஜபக்சே கூறுகிறார். இதற்கு இந்திய பிரதமர் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறாரே? இந்தியாவில் பாதுகாப்புத்துறைக்கு அமைச்சரே இல்லையே? ஒருவரே 3 பொறுப்புகள் வைத்திருக்கிறாரே? பிறகு எப்படி பாதுகாப்பு இருக்கும்.

இந்தியாவை சமய அடிப்படையில் பிளவுபடுத்த பார்க்கிறார்கள். இதை பகிரங்கமாகவே சொல்லிக்கொள்கிறேன். இது விபரீதமான போக்கு. ஆர்.எஸ்.எஸ். பின்னால் 54 அமைப்புகள் இருக்கிறது. இந்த நாட்டை இந்துக்கள் நாடாக மாற்ற பார்க்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரபிரதேசத்தில் 600 இடங்களில் மத மோதல்கள் நடந்து உள்ளது. இதை கண்டித்து நரேந்திரமோடி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. உள்நாட்டு பாதுகாப்பு குறித்து தெளிவான கொள்கையை அவர்கள் வகுக்கவில்லை. இதனால் பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் அதிகரிக்ககூடும்.

அனைத்து அதிகாரங்களையும் பிரதமர் தன்கையில் வைத்துள்ளார். இது நாட்டுக்கு நல்லதல்ல. பிரதமர் அதிகாரிகளுடன் நேரடியாக பேசும் வகையில் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கையில் அதிகாரம் தரப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பொம்மைகள் போன்று இருக்கிறார்கள். ஒரு சில மந்திரிகளை தவிர மற்றவர்கள் அனைவரும் பொம்மைகள் தான். இது மோசமான போக்கு.

நாங்கள் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. 5 ஆண்டுகளில் நீங்கள் இந்த நாட்டை வளர்ச்சி நாடாக மாற்றியிருக்க வேண்டும். மதரீதியான பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். இதைதான் 10 கட்டளைகளாக நாங்கள் குறிப்பிடுகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், கார்த்தி ப.சிதம்பரம்,விஜயதாரணி எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தியாகராயநகர் ஸ்ரீராம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்