முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் திருப்பதி குடைகள் ஊர்வலம் தொடங்கியது

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

 

சென்னை, செப். 26 – சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம் புறப்பட்டது. திருப்பதி திருமலை ஏழு மலையான் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி சென்னையில் ஆண்டு தோறும் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது.

இந்த ஆண்டு பிரம்மோற்சவம் இன்று திருப்பதியில் தொடங்குகிறது. இதையொட்டி திருக்குடை ஊர்வலம் நேற்று பகல் 12 மணிக்கு பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டது.

முன்னதாக சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. அதன் பிறகு ஊர்வலம் தொடங்கியது. முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் தலைமை தாங்கினார். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால், ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஐயர் மடம் ஸ்ரீமத்பரமஹம்ஸ சேத்தியாதி ரங்க ராமானுஜ ஜீயர், நிர்வாக அறங்காவலர் வேதாந்தம்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர். ஆர்.கோபால்ஜி தலைமையில் திருக்குடைகள் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பக்தர்கள் பெருமாள் பாடல்கள் பாடியவாறும், பக்தி கோஷங்கள் முழங்க சென்றனர்.விஸ்வ இந்து பரிஷத் மாநில செயல் தலைவர் சசிகுமார், பொருளாளர் ஜெகநாத செட்டியார் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குடைகள் என்.எஸ்.சி. போஸ்ரோடு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு வழியாக பைராகி மடம் சென்று அங்கிருந்து வ.உ.சி. சாலை வழியாக மாலையில் கவுனி தாண்டியது.

பின்னர் கால்ட் குவார்ட்டர்ஸ், சூளை நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பட்டாளம், ஒட்டேரி வழியாக இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தது. அங்கு இரவு தங்கி விட்டு இன்று காலை 6 மணிக்கு கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக அயனாவரம், பெரம்பூர், அகரம் ஜங்ஷன், திரு.வி.க. நகர் வழியாக வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலை இன்று இரவு அடைகிறது.

நாளை (27–ந்தேதி) அங்கிருந்து புறப்பட்டு பாடி, முகப்பேர், சந்தான சீனிவாச பெருமாள் கோவில், அம்பத்தூர் முருகன் கோவில் திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவில் வழியாக ஆவடி காமராஜர் நகர் பெருமாள் கோவிலை இரவு அடைகிறது.

28–ந்தேதி இந்துக் கல்லூரி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் வீரராகவர் கோவில் வழியாக ஐ.வி.ஆர்.திருமண மண்டபத்தில் தங்கி அங்கிருந்து 29–ந்தேதி வேன் மூலம் திருப்பதியை அடைந்து ஏழுமலயானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

திருக்குடைகள் செல்லும் வழி நெடுகிலும் பெண்கள் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் பழம் உடைத்தும் வழிபட்டனர். செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆங்காங்கே பெருமாள் படங்கள் வைத்து பக்தி பாடல்கள் ஒலிபரப்பி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்