முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.30 - தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று கவர்னர் மாளிகையில் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்..

உறுதிமொழி ஏற்கும்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.அவரைத் தொடர்ந்து பதவியேற்ற தமிழக அமைச்சர்களும் கலங்கிய கண்களுடன் காணப்பட்டனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவரசக்கூட்டத்தில் சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிக்கைக்கு சென்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்தார். அப்போது தன்னை சட்டமன்ற அதிமுக தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார்.

இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார். இதற்கான செய்திக்குறிப்பு கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று முன்தினம்வெளியிடப்பட்டது.

பதவியேற்பு விழாவுக்கு வசதியாக கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நேற்று நண்பகலில் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தமிழக கவர்னர் ரோசய்யா அவருக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார். உறுதிமொழியை ஏற்கும் உணர்ச்சி மேலிட்டு கண்ணீர் மல்க உறுதிமொழியை பன்னீர்செல்வம் ஏற்றார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரும் பதவியேற்றார்கள். அவர்களும் கண்ணீர் மல்க காணப்பட்டனர். 2001ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் முதன் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். 6 மாத காலம் அவர் முதலமைச்சராக இருந்தார். தற்போது 2-வது முறையாக முதலமைச்சராகி இருக்கிறார்.

புதிய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (வயது 63). பி.ஏ. படித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1951–ம் ஆண்டு ஜனவரி 14–ந் தேதி பிறந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், மகன்கள் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா ஆகியோர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்