முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு பெருகும் அனுதாப அலை

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜெயலலிதாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு மற்றும் அனுதாப அலை பெருகி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஜெயலலிதா மீதான வழக்கில் கடந்த 27ம் தேதியன்று கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட செய்தி அறிந்ததும் ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளிப்பில் ஆழ்ந்தது. தமிழகம் சோகக் கடலில் மூழ்கியது. தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். என்றைக்கும் எங்களுக்கு அம்மாதான் முதல்வர் என்று கூறிய அவர்கள் அதற்கு காரணம் அம்மா ஒருவர்தான் தமிழக மக்களுக்கு நல்லது செய்கிறார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தி.மு.க. தலைவர் கருணாநிதியின், கொடும்பாவிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வணிகர்கள், கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த கடையடைப்பு போராட்டம் கடந்த 3 நாட்களாகவே நீடிக்கிறது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர் போன்ற முக்கிய நகரங்களில் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் ஆங்காங்கே கட்சியினரும், பொதுமக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். இது  ஒன்றும் இறுதி தீர்ப்பல்ல என்று  அவர்கள் கூறி இருக்கிறார்கள். ஜெயலலிதா தடைகளை தாண்டி அவற்றை தகர்த்தெறிந்து மீண்டு வருவார் என்று தோழமை கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரபல பத்திரிகையாளர் சோ கூறுகையில், ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை பெருகி வருவதாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்தையே பொதுமக்களும் கூறி வருகிறார்கள்.. 1.76 லட்சம் கோடி கொள்ளையடித்தவர்கள் எல்லாம் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது ஜெயலலிதாவுக்கு இப்படி தீர்ப்பு வழங்குவதா என்று ஒரு சாதாரண குடிமகனும் புலம்புகிறார். அது மட்டுமல்ல, வரைமுறையே இல்லாமல் ரூ. 100 கோடி அபராதம் விதிப்பதா என்றெல்லாம் பொதுமக்களே புலம்புகிறார்கள். இந்த தீர்ப்பு குறித்து பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறிய போது, இந்த தீர்ப்பை கூறிய நீதிபதி குன்ஹா, மிகப் பெரிய தவறு இழைத்து விட்டார். சட்டத்தின் கோட்பாடுகளை அவர் மதிக்கவில்லை என்று கொதித்துப் போய் கூறியுள்ளார். சட்டத்தின் எல்லையை தாண்டி அவர் தீர்ப்பு கூறி இருப்பதாகவும் ஜெத்மலானி கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் போராட்டக் களத்தில் குதித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பிரபல நடிகர்கள், நடிகைகள் அனைவரும் பங்கேற்று நாங்கள் என்றென்றும் ஜெயலலிதாவின் பக்கமே என்று கூறியுள்ளனர். காரணம், ஜெயலலிதா கலையுலகிற்கு கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் சேவை செய்தவர். அது மட்டுமல்ல, திரையுலகிற்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியவர் ஜெயலலிதா. திருட்டு விசிடி ஓழிப்பில் முக்கிய பங்காற்றியவரும் அவரே.

அதனால்தான் அவருக்கு அனைத்து துறையை சேர்ந்தவர்களும் ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார்கள். திரையுலகிற்கு மட்டுமல்ல, அனைத்து துறைக்குமே பல நன்மைகளை செய்தவர் ஜெயலலிதா. கல்வித் துறை என்று எடுத்துக் கொண்டால் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் மற்றும் சீருடைகள் என அனைத்து சலுகைகளையும் வழங்கி கல்வி புரட்சிக்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அதே போல் தாய்மார்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு தாலிக்கு தங்கம், கறவை மாடுகள், ஆடுகள் என அனைத்தையும் வழங்கி அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர் மக்களால் அம்மா என அன்புடன் அழைக்கப்படும் ஜெயலலிதா. அது மட்டுமல்ல, மக்களின் நன்மை கருதி அவர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டால் அதற்கு பக்கங்கள் போதாது. அன்னதான திட்டம் முதல் அனைத்து திட்டங்களும் அவரது நல்ல உள்ளத்தை பறைசாற்றுகின்றன.

தாகம் தீர்ப்பது புண்ணியம் என்பார்கள். அதை நன்கு உணர்ந்த ஜெயலலிதா அம்மா குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இத்திட்டத்தின் படி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ. 10க்கு வழங்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் இதை வாங்கி பலனடைகிறார்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்கள். அந்த உப்பையும் குறைந்த விலையில் வழங்கியவர் ஜெயலலிதா.

அதன் பிறகு அம்மா மருந்தகங்களை தொடங்கி வைத்த ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்த ஒப்பற்ற திட்டம்தான் சலுகை விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் திட்டம். இந்த திட்டத்தின் படி ஒரு மூட்டை சிமெண்ட் ரூ. 190 க்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு உன்னத திட்டம் என்றால் அதுதான் அம்மா உணவக திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் வயிறார சாப்பிட்டு வருகிறார்கள். ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் என அனைத்து சாதங்களும் வழங்கப்படுகின்றன. இப்படி மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவக திட்டத்திற்கு வெளி மாநிலங்களிலும் வரவேற்பு பெருகி வருகிறது. இந்த திட்டத்தை ஆந்திர மாநிலமும் பின்பற்ற இருப்பதாக தகவல்கள்  வெளியாகி உள்ளன. இப்படி நாள்தோறும் மக்களை பற்றியே சிந்தித்து அவர்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்ததோடு மட்டுமின்றி அவற்றை நிறைவேற்றியும் காட்டியவர் ஜெயலலிதா.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களுக்காக நான், மக்களால் நான் என்று குறிப்பிட்டதை இன்றளவும் மறக்க இயலாது. இப்படி பட்டியலிட முடியாத திட்டங்களை செயல்படுத்திய ஒரே காரணத்தால்தான் அவருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு மற்றும் அனுதாப அலை பெருகியுள்ளது என்றால் அது மிகையாகாது.     

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்