முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா விடுதலையாக கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக் 1 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில் அவர் விடுதலையாக வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் மாநில அம்மா பேரவை சார்பில் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள், அங்கபிரதட்சனங்கள் நடைபெற்றன.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தடைகளை தகர்த்தெறிந்து விரைவில் விடுதலையாக வேண்டி புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பில் தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் சர்வ சமய கூட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்துமாறு மாநில பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற புரட்சித் தலைவி அம்மா பேரவை மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் நடைபெற்றன.

சென்னை வடபழனியில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. திருச்சி உச்சிப் பி்ள்ளையார் ஆலயத்தில் அம்மா பேரவை சார்பில் ஜெயலலிதா விடுதலையாக கோரி வழிபாடுகள் நடைபெற்றன. திருச்சி, உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் அதிமுக மகளிரணியினர் விரதம் இருந்து அம்மனை வழிபட்டனர். ஜெயலலிதா விடுதலையாகும் வரை எங்கள் வழிபாடு தொடரும் என்று மகளிரணியினர் தெரிவித்தனர்.

இதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நாகூர் தர்ஹாவிலும், மதுரை கோரிப்பாளையம் தர்ஹாவிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. மதுரை தூய மரியன்னை தேவாலயத்திலும் மாநகர் மாவட்ட பேரவை சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மற்றும் ராமநாதபுரம், திருவாரூர், நாகை, விழுப்புரம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் ஜெயலலிதா விடுதலையாக கோரி வழிபாடு நடைபெற்றது. திருவண்ணாமலையில் அதிமுகவினர் அங்கபிரதட்சனம் செய்து வழிபட்டனர். இன்னும் சிலர் மொட்டையடித்து ஜெயலலிதா விடுதலைக்காக பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைத்துக்கும் மேலாக தமிழ் திரையுலகமே திரண்டு நேற்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்