முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மீண்டு வர வேண்டி சர்வ சமய பிரார்த்தனை

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக் 2:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தடைகளை தகர்த்தெறிந்து விரைவில் மீண்டு வர வேண்டி ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஆலயங்கள்தோறும் சர்வ சமய கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி அறிஞர் அண்ணா, திராவிட இயக்கத்தின் ஆட்சியை நிலைநாட்டினார். அவரது மறைவிற்கு பின்னால் தமிழகத்தின் தீயசக்தி கருணாநிதியின் பிடியில் சிக்கி தவித்த திராவிட இயக்கத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்றுவதற்காக எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை 1972ல் தொடங்கினார். தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் சுற்றுபயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறி கருணாநிதியின் சூது,வாதுகளை வென்று அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி 1977_லிலே தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியை நிறுவினார். எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலின் பேரில் அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தமிழக மக்களை நேரில் சந்தித்து அ.தி.மு.க வின் கொள்ளைகளையும், கோட்பாடுகளையும் எடுத்துரைத்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னால் அவரது ஒரே அரசியல் வாரிசாக ஜெயலலிதா உருவெடுத்தார்.

தமிழகத்தின் தீயசக்தி என்று வர்ணிக்கப்பட்ட கருணாநிதியின் சூழ்ச்சியால் அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்ட நேரத்தில் தன்னுடைய மதிநுட்பத்தால் அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை ஒன்றிணைத்து கழகத்தில் இருந்த சூதுமதியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை அப்புறப்படுத்தி இழந்த இரட்டை இலை சின்னத்தையும் மீட்டு அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்று தொண்டர்களை ஒன்றிணைத்து ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக அ.தி.மு.க வை வழி நடத்தி சென்று கருணாநிதியின் சூது, வாதுகளை வென்று கடந்த 1991_ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை சந்தித்து அ.தி.மு.க வை அமோக வெற்றி பெறசெய்து தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை நிறுவினார். முதன் முறையாக தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா நாடு போற்றும் நல்லாட்சியை நடத்தினார். அப்போது பெண் சிசு கொலையை தடுக்கும் விதத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண்களுக்கு பாதுகாப்பு தரும் மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அன்னை தெரசாவே தமிழகத்திற்கு வந்து ஜெயலலிதாவை நேரில் பாராட்டி சென்றார். அதன் பின்னர் கருணாநிதியின் ஆட்சியில் தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை எல்லாம் சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெற்று 2001_ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று 2_ வது முறையாக ஜெயலலிதா முதல்வர் பொறுப்பை ஏற்று ஒரு பொற்கால ஆட்சியை நடத்தினார். அதன் பின்னர் கருணாநிதியின் பிடியில் சிக்கி தவித்துகிடந்த தமிழகத்தை மீட்டெடுக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரில் சந்தித்து கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சியின் கோரத்தாண்டவங்களை மக்கள் மத்தியில் ஜெயலலிதா எடுத்துரைத்தார். அவரது கருத்துக்களை காது கொடுத்து கேட்டறிந்த மக்கள் கருணாநிதியையும், அவரது கட்சியையும் 2011ம் ஆண்டு தேர்தலில் தூக்கியெறிந்தனர்.

இதையடுத்து அந்த தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. இந்த மகத்தான வெற்றியின் மூலம் தமிழகத்தில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். அந்த தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை தந்த தமிழக மக்களுக்கு ஏற்றத்தை தந்தார் ஜெயலலிதா. தனது தனித்திறமையினாலும்,விடா முயற்சியினாலும்,மதி நுட்பத்தினாலும் ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் சிறந்து விளங்கும் வகையில் ஒரு பொற்கால ஆட்சியை நடத்தி வந்தார். கருவிலிருக்கும் குழந்தை முதல் கல்லறை செல்லும் முதியவர்கள்வரை ஏற்றம் பெரும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தபட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றவுடன் ஒரு கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்து அந்த கோப்பில் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் விலையில்லா கறவை மாடுகள்,ஆடுகள், வழங்கும் திட்டம். குடும்ப பெண்களின் சுமையை குறைக்கும் வகையில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் திட்டம். வெளிநாட்டு மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெறும் வகையில் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம். ரூ.15,00,000 லட்சம் கோடிமுதலீட்டில் தமிழ்நாடு தொலை நோக்கு திட்டம். ரூ.31,ஆயிரம் கோடி முதலீட்டில் மின்உற்பத்தி திட்டங்கள். ஏழை பெண்களுக்கு தாலிக்கு 4_கிராம் தங்கத்துடன் திருமண நிதியுதவி வழங்கும் திட்டம். பசுமை வீடுகள் திட்டம். 22 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் , பல வகை தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்கும் திட்டம். 15 புதிய தொழில் பேட்டைகள் உருவாக்கும் திட்டம். போன்ற பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அமல்படுத்தி வந்தார்.

பசிப் பிணியை போக்குவதற்கு தமிழகத்தில் 10 மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் திறந்து மலிவு விலையில் உணவு வகைகள் வழங்கும் திட்டம்.பள்ளி,கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு என இப்படி பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக நாள்தோறும் அறிவித்து ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.

நீதியை நிலைநாட்டும் வகையில் ரூ.163 கோடியில் நீதிமன்றங்களுக்கு புதிய திட்டங்கள் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்தார் ஜெயலலிதா. தமிழக அரசின் தொலை நோக்குதிட்டம் 2023 என்ற புதிய திட்டத்தை 50 லட்சம் கோடியில் ஜெயலலிதா அறிவித்து அதற்கான வழிமுறைகளை நடைமுறைபடுத்தி வந்தார். இந்திய நாட்டிற்கே வழிகாட்டுகின்ற வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட பெண்களுக்கு எதிரான குற்றசெயல்களை தடுத்திட ஜெயலலிதா 13 அம்ச செயல் திட்டங்களை அறிவித்தார்.

படித்த இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ஆண்டிற்கு ரூ.100 கோடி செலவில் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். மாணவர்கள் இடை நில்லாமல் படிப்பை தொடர்வதற்கு நிரந்தரவைப்பு நிதி திட்டத்தை அவர்களது பெயரிலே வங்கிகளில் டெபாசிட் செய்யும் புதிய திட்டத்தை ஜெயலலிதா செயல்படுத்தி வந்தார்.

இவைகள் மட்டுமல்ல, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை போராடி ஜெயலலிதா மீட்டெடுத்தார். கருணாநிதி என்ற தீயசக்தி தமிழகத்தில் ஆட்சி செய்த போதெல்லாம் தன் சுய லாபத்திற்காகவும் தன் குடும்ப நலனுக்காகவும் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை எல்லாம் காவு கொடுத்து வந்தார். அப்படி கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்ட தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றவுடன் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி அது காவேரி பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லை பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி, கச்சத்தீவு பிரச்சினையாக இருந்தாலும் சரி, பாலாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி, அனைத்திலும் மத்திய அரசுடன் சட்ட ரீதியாக போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றி கண்டார். அவரது ஓய்வறியா உழைப்பினாலும் தமிழக மக்களுக்கு ஆற்றி வரும் பணிகளினாலும் செயல்படுத்தி வரும் திட்டங்களினாலும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு மகுடம் சேர்க்கின்ற வகையில் நடந்து முடிந்த 16வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவை இந்திய வரலாற்றிலேயே இதுவரை எவரும் பெற்றிடாத அளவிற்கு ஒரு இமாலய வெற்றியை பெற்றது. அந்த வெற்றி இந்திய அரசியல் வரலாற்றிலும் உலக அரசியல் வரலாற்றிலும் ஒரு உன்னதமான இடத்தை பெற்றது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாத சில அரசியல்வாதிகள் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற சூது மந்திரத்தால் தொடுக்கப்பட்ட பொய் வழக்கில் கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடக மாநிலம் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கேட்டு தமிழக மக்களும், அதிமுகவினரும் கொதித்து எழுந்தனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய கோரி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம்,மனித சங்கிலி, கடையடைப்பு போன்ற அறவழி போராட்டங்களில் பொதுமக்களும், அதிமுகவினரும் ஈடுபட்டு ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் பல்வேறு அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 2வது அணியாக தமிழகத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதா பேரவை என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த பேரவையின் மாநில செயலாளராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை தொடர்ந்து பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொதித்தெழுந்தனர். இந்த நிலையில் மாநில பேரவை நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் அவசரமாக கூடியது. அந்த கூட்டத்தில் தடைகளை தகர்த்தெறிந்து தமிழ் இனத்தை காத்திட தமிழர் குலச்சாமி நமது அம்மா விரைவிலே மீண்டு வர வேண்டி தமிழகம் முழுவதிலும் உள்ள ஆலயங்கள் தோறும் சர்வசமய கூட்டு பிரார்த்தனையில் பேரவை நிர்வாகிகளும், பேரவை தொண்டர்களும் ஈடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பேரவை நிர்வாகிகள் ஆலயங்களில் சர்வமத கூட்டு பிரார்த்தனைகளை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள பெருமாள்கோவிலில் வடசென்னை வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையிலும், மண்ணடி காளியம்மன் கோவிலில் வட சென்னை தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் எம். முகமது இம்தியாஸ் தலைமையிலும்,திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் கோயிலில் தென் சென்னை வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் ஜி. ரவிக்குமார் தலைமையிலும்,கோயம்பேடு சிவன் கோயிலில் தென் சென்னை தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் ஏ.என். புருஷோத்தமன் தலைமையிலும், திருக்கழுக்குன்றம் ராதாகிரீஸ்வரர் கோயிலில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பேரவை செயலாளர் ஆர். கபாலீஸ்வரன் தலைமையிலும், மணிப்பாக்கம் வேதபுரீஸ்வரர் கோயிலில் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட பேரவை செயலாளர் வி. பக்தவச்சலம் தலைமையிலும், குன்றத்தூர் முருகன் கோயிலில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம் தலைமையிலும், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் திருவாரூர் வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் என்.எஸ்.ஏ. இரா. மணிமாறன் தலைமையிலும், திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் திருவாரூர் தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் எஸ். பரமசிவம் தலைமையிலும், ராணிப்பேட்டை தர்ஹாவில் வேலூர் மாநகர் மாவட்ட பேரவை செயலாளர் வி. முரளி தலைமையிலும், ஆற்காடு பெருமாள் கோயிலில் வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.கே.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையிலும், ஆம்பூர் ஈஸ்வரன் நாகேஸ்வரன் கோயிலில் வேலூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர். பாலசுப்பிரமணி தலைமையிலும், ஓசூர் அம்மன் கோயிலில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ். ராமச்சந்திரன் தலைமையிலும், திருவண்ணாமலையார் திருக்கோயிலில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் கே. ராஜன் தலைமையிலும், வேம்பூர் ஆஞ்சநேயர் கோயிலில் கடலூர் கிழக்கு மாவட்ட பேரவை செயலாளர் பி. ரவிச்சந்திரன் தலைமையிலும், புவனகிரி ராகவேந்திர கோயிலில் கடலூர் மேற்கு மாவட்ட பேரவை செயலாளர் எம். உமா மகேஷ்வரன் தலைமையிலும், திண்டிவனம் ஈஸ்வரன் கோயிலில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் எஸ். முரளி என்ற ரகுராமன் தலைமையிலும், திருவென்னை நல்லூர் ஈஸ்வரன் கோயிலில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.பி. ஞானமூர்த்தி தலைமையிலும், கிருஷ்ணகிரி புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வி. கோவிந்தராஜ் தலைமையிலும், அரூர் பெருமாள் கோயிலில் தருமபுரி மாவட்ட பேரவை செயலாளர் எஸ். தென்னரசு தலைமையிலும் சிறப்பு பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்றது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் சேலம் மாநகர் மாவட்ட பேரவை செயலாளர் ஜி. வெங்கடாசலம் தலைமையிலும், சேலம் எட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமையிலும், திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் நாமக்கல் மாவட்ட பேரவை செயலாளர் இ.ஆர். சந்திரசேகர் தலைமையிலும், தாராபுரத்தில் உள்ள தர்ஹாவில் ஈரோடு மாநகர் மாவட்ட பேரவை செயலாளர் கே. பொன்னுசாமி தலைமையிலும், சத்தியமங்கலம் அருளானந்தர் தேவாலயத்தில் ஈரோடு புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் எஸ்.எஸ். ஆறுமுகம் தலைமையிலும், ஈஸ்வரன் கோயிலில் திருப்பூர் மாநகர் மாவட்ட பேரவை செயலாளர் வி. ராதாகிருஷ்ணன் தலைமையிலும், உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோயிலில் திருப்பூர் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் ஜி.வி. வாசுதேவன் தலைமையிலும், மருதமலை முருகன் கோயிலில் கோவை மாநகர் மாவட்ட பேரவை செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையிலும், ஈச்சனாரி விநாயகர் கோயிலில் கோவை புறநகர் மாவட்ட பேரவை சார்பிலும், குந்தா மஞ்சூர் மாரியம்மன் கோயிலில் நீலகிரி மாவட்ட பேரவை செயலாளர் புத்திசந்திரன் தலைமையிலும், உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் திருச்சி மாநகர் மாவட்ட பேரவை செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையிலும், மணச்சநல்லூர் திருப்பைஞ்சலி கோயிலில் திருச்சி புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் சமயபுரம் பி. ராமு தலைமையிலும், செந்துரை சிவனான்டீஸ்வரர் கோயிலில் பெரம்பலூர் மாவட்ட பேரவை செயலாளர் எஸ். கார்த்திகேயன் தலைமையிலும், கிருஷ்ணராயபுரம் சிவன் கோயிலில் கரூர் மாவட்ட பேரவை செயலாளர் எஸ். காமராஜ் தலைமையிலும், பட்டுக்கோட்டை துர்க்கையம்மன் கோயிலில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் எல். தயாளன் தலைமையிலும், மதுக்கூர் பிரமையன் கோயிலில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் மா. சேகர் தலைமையிலும், மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயிலில் நாகப்பட்டினம் மாவட்ட பேரவை செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் தலைமையிலும், முத்துப்பேட்டை ராமர் கோயில் மற்றும் தர்ஹாவில் திருவாரூர் மாவட்ட பேரவை செயலாளர் பொன். வாசுகிராம் தலைமையிலும், கரம்பக்குடி சிவன் கோயிலில் புதுக்கோட்டை மாவட்ட பேரவை செயலாளர் ஆர். நெடுஞ்செழியன் தலைமையிலும் விசேஷ பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்றது.

மதுரை எல்லீஸ் நகர் முத்துமாரியம்மன் கோயிலில் மாநகர் மாவட்ட பேரவை செயலாளர் கா. டேவிட் அண்ணாதுரை தலைமையிலும், ஒத்தக்கடை நரசிங்கம் யோக நரசிம்மர் கோயிலில் மதுரை புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் கே. தமிழரசன் எம்.எல்.ஏ. தலைமையிலும், ஆண்டிபட்டி நரசிங்க பெருமாள் கோயிலில் தேனி மாவட்ட பேரவை செயலாளர் டி.ஆர்.என். வரதராஜன் தலைமையிலும், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் திண்டுக்கல் மாவட்ட பேரவை செயலாளர் வி.டி. ராஜன் தலைமையிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் விருதுநகர் மாவட்ட பேரவை செயலாளர் பி.பி. செல்வசுப்பிரமணியராஜா தலைமையிலும், அரியக்குடி திருப்பதி பெருமாள் கோயிலில் சிவகங்கை மாவட்ட பேரவை செயலாளர் கே. ஆர். அசோகன் தலைமையிலும், திருவாடானை ஆதி ஜெகன்னாதர் பெருமாள் கோயிலில் ராமநாதபுரம் மாவட்ட பேரவை செயலாளர் சேது. பாலசிங்கம் தலைமையிலும், நெல்லை தந்தி பிள்ளையார் கோயிலில் நெல்லை மாவட்ட பேரவை செயலாளர் சுதா. கே. பரமசிவன் தலைமையிலும், மனோன்மணி வடக்கு விஜயநாராயண ஈஸ்வரன் கோயிலில் நெல்லை புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் இ. நடராஜன் தலைமையிலும், கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோயிலில் தூத்துக்குடி மாவட்ட பேரவை செயலாளர் கடம்பூர் செ. ராஜூ எம்.எல்.ஏ தலைமையிலும், குளச்சல் பள்ளிவாசலில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பேரவை செயலாளர் எம். சேவியர் மனோகரன் தலைமையிலும், தக்கலை குமரகோவில் மற்றும் தேவாலயத்தில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பேரவை செயலாளர் எஸ். ஜீன்ஸ் தலைமையிலும் விசேஷ பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்