முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுத பூஜை - விஜயதசமி: ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை.அக்.2 - ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–

வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும், செல்வத்தைத் தரும் திருமகளாகவும், துணிவைத்தரும் மலைமகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையை போற்றி வணங்கும் விழா நவராத்திரி திருவிழா. மக்களின் துன்பம் நீக்க எண்ணிய அன்னை 9 நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள்.

ஒன்பது நாட்கள் அன்னை சக்தியை வழிபடுவதால் நவராத்திரி என்ற சிறப்புப் பெயர் பெற்றது. நவராத்திரி நாட்களில் தேவியர் மூவரையும் உளமார வணங்கினால் வீரம், செல்வம், கல்வி என அனைத்து நன்மைகளையும் பெறலாம். நவராத்திரி திருவிழா என்பது ஆன்மிக விழா மட்டுமல்ல, கைவினைஞர்களின் கைவண்ணத்திற்கு பெருமை சேர்க்கும் விழா, உழைப்பின் உன்னதத்திற்கு மதிப்பளிக்கும் விழா.

விஜயதசமி தினத்தன்று கல்வி, கலை, தொழில்கள் ஆகியவற்றை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கும் திருநாள் விஜயதசமி திருநாள். அன்னை சாமுண்டீஸ்வரி மகிஷாசுரனை வதம் செய்த நாளான விஜயதசமி தினத்தன்று தீயவைகள் அகன்று நல்லவைகள் நடக்கட்டும்.

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்பது இயற்கை நியதி. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும். தமிழக மக்கள் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியை போற்றி வணங்கி, அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்