முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘பீனிக்ஸ்’ பறவை போல் ஜெயலலிதா எழுந்து வருவார்: மேயர்

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.அக்.2 - மக்கள்முதல்வர் ஜெயலலிதா தன்னை நிரபராதி என நிரூபித்து ‘பீனிக்ஸ்’ பறவை போல் எழுந்து வருவார் என மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசினார்.

சென்னை மாநகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் நேற்று முன்தினம்பிற்பகல் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மேயர் சைதை துரைசாமி, "அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும்" என்ற திருக்குறளை வாசித்து, துன்பமானது இடைவிடாது மேலும் மேலும் வந்தாலும் கலங்காமல் இருப்பவனை அடைந்த துன்பமே துன்பப்பட்டு ஒழியும், அதே போன்று ஜெயலலிதாவுக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் துன்பப்பட்டு ஒழியும் என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, மேயர் சைதை துரைசாமி மேலும் பேசியதாவது:-

சென்னை மாநகராட்சி மன்றத்தின் இன்றைய கூட்டம் ஒரு அசாதாரண சூழ்நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. பொல்லாங்கு செய்யும் புன்மை மனத்தவரின் சதிச்செயலால் இன்றைக்கு ஒட்டு மொத்த தமிழ்நாடும் குமுறிக் கொண்டிருக்கிறது.

தனக்கென வாழா தகைமையாளர், தனக்கிணை இல்லா தலைமையாளர், நூறாயிரம் ஆண்டு ஏங்கித் தவம் கிடந்து வாராது வந்த மாமணி மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீது, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி அன்று வழங்கப்பட்ட நீதி மன்ற கோட்பாடுகளுக்கும் உச்சநீதி மன்ற வழிகாட்டுதலுக்கும் எதிரான தீர்ப்பின் காரணமாக எரிமலையாக கொதித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.

நேர்மையற்ற வகையில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர் ஜெயலலிதா. தனக்குப் பின்னே தன் குடும்பம் தன் சொந்தம் என்று சொத்து சேர்க்க வேண்டிய தேவையில்லாதவர் ஜெயலலிதா. படுபாவிகள் சூழ்ச்சி செய்து ஜெயலலிதாவை இப்படி கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்களே என்று பொதுமக்கள் மனம் வெந்து துடிக்கின்றார்கள். இந்த வழக்குக்கு காரணமான சதிகாரர்களையும் இதற்கு துணையாக இருந்த ஏனையோரையும் பார்த்து தமிழ் இனமே சாபம் விட்டுக் கொண்டிருக்கிறது.

1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதன் முறையாக தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பொய்யுரைத்து, புனைசுருட்டுக்களை அள்ளி வீசி, பொதுமக்களை ஏமாற்றி 1996-ம் ஆண்டில் ஆட்சி பீடம் ஏறிய கருணாநிதி, தனது ஆட்சிக் காலத்தில் செய்ததெல்லாம், ஜெயலலிதா மீது திட்டமிட்டே பொய் வழக்குகள் போட்டதுதான்.

ஒன்றல்ல, இரண்டல்ல! விதம் விதமாக ஜோடித்து மொத்தம் 12 பொய் வழக்குகளைப் போட்டார் கருணாநிதி. இந்த வழக்குகள் எல்லாம். கருணாநிதியால் வடிவமைக்கப்பட்டவை, சூழ்ச்சி வலையில் பின்னப்பட்டவை.

திட்டமிட்டு ஜோடித்து போடப்பட்ட பொய் வழக்குகள் என்பதை, மக்கள் உணர்ந்த காரணத்தால் தான், 2001 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்களிலும், அதன் பின்னர் நடைபெற்ற ஐந்து உள்ளாட்சி மன்ற தேர்தல்களிலும், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் நாடே வியக்கும் வண்ணம் ஜெயலலிதாவுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து நிரூபித்தனர்.

2001-ம் ஆண்டில் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதும் அன்றைய தமிழ் மாநில காங்கிரசின் தலைவராகவும், சட்ட மன்ற எதிர் கட்சித் தலைவராகவும் இருந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் சட்டமன்றத்திலே கூறும்போது, "மக்கள் மன்றம் தான் மகத்தான மன்றம் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லாத காரணத்தால் தான், மக்கள் மன்றம் உங்களுக்கு மாபெரும் வெற்றியை அள்ளித் தந்திருக்கிறது. அதனால், அந்த பொய் வழக்குகளை ரத்து செய்திட சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்" என்று முன் மொழிந்தார்.

ஆனால் ஜெயலலிதாவோ, வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன், வெற்றி பெறுவேன் என்று சூளுரைத்தார். மேற்கூறிய உண்மைகள் அனைத்தும் சட்ட மன்ற நடவடிக்கை பதிவேடுகளில் பதிவாகி உள்ள சரித்திர சான்றுகள் ஆகும்.

அதே போல நிரபராதி என நிரூபித்து நியாயத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் ஜெயலலிதா வைத்திருந்த மாண்பை வெளிப்படுத்தி கருணாநிதியால் போடப்பட்ட 10 பொய் வழக்குகளில் வெற்றி பெற்று அந்த பொய் வழக்குகளை முறியடித்தார்.

ஜெயலலிதா எந்த வழக்கைக் கண்டும் இதுவரை அஞ்சியதில்லை. சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கும் துணிவு படைத்த ஜெயலலிதா, கருணாநிதி ஜோடித்த பொய் வழக்குகளை நீதி மன்றங்களில், நேருக்கு நேர், தலை நிமிர்ந்து சந்தித்து அந்த வழக்குகள் அனைத்தையும் தகர்த்தெறிந்தார்.

அதே போல, இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் இந்த வழக்கையும் நீதிமன்றத்தில் வழக்காடி, வாதாடி விரைவில் நீதியை நிலை நிறுத்துவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஜெயலலிதாவின் கால் சுண்டு விரலில் ஒரு சிறு முள் தைத்தாலும், தமிழ்நாடே கொந்தளிக்கும் குமுறி எழும்.

ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்து தண்டனை பெற்று தந்தவர்களை, அதை ஆதரித்து பேசுகிறவர்களை, ஏழை சிந்தும் கண்ணீரை ஏளனம் செய்வோரை, எதிர் வரும் தேர்தல்களில் அரசியலை விட்டு ஓட்டு மொத்தமாய் அப்புறப்படுத்துவார்கள், ஜெயலலிதாவுக்கு சதிச்செயலால் கிடைத்த தண்டனையை சரி என்று யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மக்கள் சரியான தண்டனை வழங்குவார்கள். இது சாபம் அல்ல, சத்தியம்! இதுவே நாளைய சரித்திரம்!

ஏழரை கோடி தமிழ் மக்களின் இதயத்தில் நிறைந்த தலைவரை, உலக தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து இருக்கும் ஒப்பற்ற தலைவரை, சதியாட்டம் போட்டு, சாய்த்து விட்டதாக குத்தாட்டம் போடும் வல்லூறுகளுக்கு மரண அடியை, மக்கள் சக்தியை திரட்டி கொடுப்பதற்கு ஜெயலலிதா ஆயத்தம் ஆகிவிட்டார்.

பூட்டிய சிறைக் கதவை தகர்த்து புடம் போட்ட தங்கமாய், தன்னை நிரபராதி என நிரூபித்து, ‘பீனிக்ஸ்’ பறவையை போல் எழுந்து வருவார்.

இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்