முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதாலா ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக்  6:

ஜாமீன் நிபந்தனைகளுக்கு புறம்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறி அரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலாவின் ஜாமீனை ரத்து  செய்ய கோரி டெல்லி ஐகோர்ட்டில் சிபிஐ புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் நியமன ஊழல்  தொடர்பான வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு கடந்த ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனது உடல்நல குறைவை காரணம் காட்டி டெல்லி ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் பெற்றார். அரியானாவில் வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தற்போது அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் கட்சிகளிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே நீதிமன்றத்தில் உண்மைக்கு புறம்பான காரியத்தை கூறி சவுதாலா ஜாமீனில் வெளிவந்துள்ளதாகவும், தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சவுதாலாவை தங்கள் கட்சியின் முக்கிய பிரச்சார தலைவராக இந்திய தேசிய லோக் தள கட்சி குறிப்பிட்டுள்ளதை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளது. அவரது ஜாமீன் விவகாரம் குறித்து ஆட்சேபங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க முடியாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை எதிர்ப்பாளர்கள் அணுகலாம் என்றார்.

இந்நிலையில் சவுதாலாவின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய கோரி டெல்லி ஐகோர்ட்டில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக தனது உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஜாமீன் பெற்ற சவுதாலா நிபந்தனைகளுக்கு புறம்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக கூறி அவரது ஜாமீனை ரத்து செய்யுமாறு ஏற்கனவே டெல்லி ஐகோர்ட்டில் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 26ம் தேதியன்று சரணடைவதாக சவுதாலா தரப்பில் தெரிவிக்கப்பட்ட போது வரும் 17ம் தேதியன்று அவர் சரணடைந்தால் போதும் என கூடுதல் அவகாசத்தை டெல்லி ஐகோர்ட் அளித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரச்சார கூட்டங்களில் சவுதாலா கலந்து கொண்டதை தொடர்ந்து அவரது ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய கோரி சிபிஐ இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்